ஈபிடிபியினரும் இராணுவத்தினருமே எனது மகனை கடத்தினர்!

அம்மா.. இங்கே பாருங்கள் நான் இங்கே இருக்கிறேன்… என என்னுடைய பிள்ளை ஈ.பி.டி.பி முகாமிற்குள் இருந்து கத்தினான். என்னுடைய பிள்ளையை பார்க்க ஓடிச் சென்றபோது அங்கு நின்ற படையினர் துப்பாக்கியை கொண்டு என்னை சுடுவதற்கு துரத்தினார்கள் என அராலி செட்டியார் மடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் துளசிமலர் என்ற தாய் கதறியழுது சாட்சியமளித்துள்ளார். காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகள் இன்றைய தினம் சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்த நிலையில் குறித்த சாட்சியம் வழங்கப்பட்டிருக்கின்றது.

குறித்த சாட்சியத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2007.05.12ம் திகதி பிரதேச செயலகத்திற்கு தந்தையுடன் கடவுச்சீட்டு எடுப்பதற்காக சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது 252-3286 என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட வெள்ளை வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த படை யினரும், ஈ.பி.டி.பியினரும் வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வைத்து எனது மகனை பிடித்துச் சென்றார்கள்.

பிடிக்கும்போதே என் பிள்ளையை வீதியில் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கியே இழுத்துச் சென்றார்கள். அதில் வந்திருந்த ஈ.பி.டி.பியினரை எமக்கு தெரியும். பின்னர் நான் மானிப்பாய் ஈ.பி.டி.பி முகாமுக்குச் சென்றேன். அங்கே நின்றவர்கள் தாங்கள் பிடிக்க வில்லை. என கூறிவிட்டார்கள்.

மேலும் பிள்ளை வேண்டுமென்றால் கடவுளை கும்பிடுங்கள் எனவும் கூறினார்கள். பின்னர் நான் யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.பி.டி.பி முகாமிற்கு வந்தபோது நான் வந்திருப்பதை அறிந்த எனது மகன் பெரும் சத்தமாக கதறியழுது அம்மா நான் இங்கே இருக்கிறேன் என கத்தினான்.

நான் உள்ளே செல்ல முற்பட்டபோது அங்கு நின்ற படைசிப்பாய் துப்பாக்கியால் என்னை சுடுவதற்கு வந்தான். பின்னர் நான் ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாண பொறுப்பாளர் என இருந்த சில்வேஸ்திரி அலென்டினை சந்தித்து சம்பவத்தை கூறினேன். அப்போது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தங்கள் அலுவலகத்திற்கு வரும்படியும் பார்க்கலாம் என்றும் கூறினார்கள்.

பல மாதங்களாக அந்த முகாமுக்கு நடந்தேன். எந்த பயனும் இல்லாமல். டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் சந்தித்தேன். அப்போது அவரிடம் விடயத்தை சொன்னபோது உங்கள் மகன் வட்டுக்கோட்டை பொலிஸ் ஊடாக ஒப்படைக்கப்பட்டதாக கூறிவிட்டார்.

அவர் சொன்னது பொய். பிள்ளை விடுவிக்கப்படவேயில்லை. பின்னர் 5 வருடங்களுக்கு முன்னர் கண்டியில் வைத்தியசாலை ஒன்றில் படையினருடன் எனது மகன் நிற்பதை கண்டதாக ஒருவர் கூறினார்.

ஆனால் அவருக்கு கிட்டச் செல்ல முடியவில்லை. எனவும் அவர் கூறிவிட்டார். எனவே எனது மகன் உயிருடன் இருக்கிறான். அவனை மீட்டுக் கொடுங்கள் என ஆணைக்குழு முன்னிலையில் பெரும் சத்தமிட்டு கதறியழுது சாட்சியமளித்தார் அவர்.
puthinam.com