உடனடித் தேவை – வெப்பம்!

நேற்றிரவு முதல் சென்னையில் மீண்டும் மழை தீவிரமடைந்துகொண்டுள்ளது. ஏற்கெனவே பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. நன்றாக கவனியுங்கள், இந்த வெள்ளம் வடியும் தன்மை கொண்டதல்ல. மேட்டிலிருக்கும் நீர்தான் வடியும். சென்னையின் பல்லாயிரம் குடியிருப்புகள் பள்ளங்களில், நீர்நிலைகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவை. பள்ளத்தில் இருக்கும் நீர் வடியாது, வடியாது!

மழை நின்று, நன்றாக வெயில் அடித்தால் காய்ந்து போகும். தானாக வடியாது. இந்தச் சூழலை மிகவும் அழுத்தமாகவும் அவசரமாகவும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

’சென்னை இயல்புநிலைக்குத் திரும்புகிறது’ எனும் செய்தியைப் படிக்கும்போது வேதனையே மிஞ்சுகிறது.

வெயில் அடித்து நீர் காய்வதற்கான சாத்தியம் இன்னும் சில நாட்களுக்கு தென்படவில்லை. மக்கள் நீரில்தான் இருக்கிறார்கள். கணுக்கால் அளவு நீர் உள்ள பகுதிகள், முழங்கால் அளவு நீர் உள்ள பகுதிகள் என வகைப் பிரிக்கலாம். நீர் இல்லாத பகுதிகள் எனப் பார்த்தால், மிகக் குறைவான இடங்களே உள்ளன.

ஆக, குளிரில் நடுங்கி மோசமான சிக்கல்கள் ஏற்படும் நிலை உருவாகிக் கொண்டுள்ளது.

போர்வைகள், கம்பளி, மழைக் கோட்டுகள் ஆகிய மூன்றைத் தவிர வேறு எந்தப் பொருட்களையும் செம்மை மீட்புக் குழுவினருக்கு அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இன்று காலை வரை, பெங்களூரிலிருந்து ஏராளமான பொருட்கள் செம்மை முகாம் அலுவலகத்தை வந்தடைந்துள்ளன. மேலும் பல பகுதிகளிலிருந்து வந்த வண்ணமுள்ளன.

இப்போதைக்கு மற்ற பொருட்கள் போதும். உங்கள் ஆற்றலை போர்வைகள், கம்பளி, மழைக் கோட்டுகளை நோக்கித் திருப்புங்கள். மிக முக்கியமாக, சிறுவர்கள், குழந்தைகளுக்கான கதகதப்பு ஏற்பாடுகள் தேவை. ஏற்கெனவே பதினைந்து நாட்களாக குழந்தைகள் நனைந்துகொண்டும் நீரில் வாழ்ந்துகொண்டுமிருக்கிறார்கள்.

தாழ்வான பகுதிகளில் மாலை நேரத்து நெருப்பு முகாம்களை ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.

எரிவாயு அடுப்புகளை வைத்து சீரக நீர், வெந்நீர் கொதிக்க வைத்துத் தர இருக்கிறோம். மூலிகை தேநீரும் அளிக்க வேண்டுமென திட்டமிட்டுள்ளோம்.

சூழல் இப்படித்தான் உள்ளது. நாம் பதற்றமடைய வேண்டாம். ஆனால், விரைந்து நிலைமைக்கேற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

செம்மை முகாம்களை வேளச்சேரி பகுதி, வட சென்னைப் பகுதி ஆகிய இரு இடங்களில் அமைத்துள்ளோம்.

முடிந்த வரைக்கும் நீங்களே போர்வை, கம்பளி, மழைக் கோட்டுகளை வாங்கி அனுப்புங்கள். பணமாக அனுப்பினால் அதைக் கொண்டு நாங்கள் கொள்முதல் செய்யும் பணியில் நேரம் விரயமாகிறது.

மொத்தமாகக் குறைந்த விலையில் மேற்கண்ட பொருட்கள் விற்பனை செய்வோர் யாரேனும் இருந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒருங்கிணைப்பாளர்கள்:
திருமதி நளினி: 7401234981
திருமதி காந்திமதி: 9791490365
திருமதி சாதிகா: 90030 56763

(Senthamizhan Maniarasan)