உதயமானது .. ‘தமிழ் மக்கள் பேரவை’

 

தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர். குறித்த அமைப்பினது அங்குரார்ப்பணம் யாழ். பொது நூலகத்தில் சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி இரவு 9 மணி வரையில் இடம்பெற்றது. அந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசு கட்சியின் உப தலைவர் சீ.கே. சிற்றம்பலம், வட மாகாண சபை உறுப்பினரும் புளெட் அமைப்பினை சேர்ந்தவருமான க.சிவநேசன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சமயவாதிகள், மருத்துவர்கள் என 30 பேர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த அமைப்பின் உருவாக்கம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு உள்ளது. அதன் முக்கிய நோக்கம் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதனை அடிப்படையாக கொண்டும், இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்களிடம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை நடாத்துவதும், ஐ நா சபையால் அறிவுறுத்தப்பட்ட தீர்மானம் தொடர்பான பொறுப்பு கூறல் போன்ற நடவடிக்கையை கண்காணித்து அவை தொடர்பில் கண்காணிக்க இந்த அமைப்பு உருவாக்கபட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.