உயிருடனோ இறந்தோ அசாட் வெளியேற வேண்டும்

சிரியாவில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டுமாயின், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், உயிருடனோ அல்லது இறந்தோ, பதவியை விட்டு வெளியேற வேண்டுமென, சிரிய எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன. சிரியப் பேச்சுவார்த்தைகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், அங்கு வைத்து, இடைக்கால அரசாங்கம் அல்லது நிர்வாகப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை முயன்று வருகின்றது.

அதற்கு முன்னதாகக் கருத்துத் தெரிவித்த எதிரணிகளின் பிரதான பேரம்பேசல் தலைவரான மொஹமட் அல்லோஷ், ‘இடைக்காலப் பகுதி, பஷால் அல்-அசாட்டின் வீழ்ச்சியுடன் அல்லது இறப்புடன் ஆரம்பிக்க வேண்டுமென நாம் நம்புகிறோம்” எனத் தெரிவித்தார். ‘இவ்வரசாரங்கத்தினது இருப்புடனும் அதன் தலைவர் அதிகாரத்தில் இருக்கும் போதும் அது ஆரம்பிக்க முடியாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள சிரிய வெளிநாட்டமைச்சு, ஜனாதிபதிப் பதவி குறித்து ஜெனீவாவில் இடம்பெறவுள்ள பேச்சுக்களில் கவனஞ்செலுத்துவதற்குத் தயாராக இல்லையெனத் தெரிவித்துள்ளது. ‘ஜனாதிபதிப் பதவியின் நிலை குறித்து உரையாடும் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை. அவர்களுடைய எண்ணம் இதுவானால், பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வரத் தேவையில்லை” என வெளிநாட்டமைச்சர் வாலிட் அல்-மொலெம் தெரிவித்தார்.

இதேவேளை, சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவமொன்றில், சிரிய அரசின் ஜெட் விமானமொன்றைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக எதிரணிப் போராளிகள் தெரிவிக்கின்றனர். இதன்போது, அதன் விமானி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இந்த ஜெட் விமானம், ஏவுகணைகளால் வீழ்த்தப்பட்டதா அல்லது விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளால் வீழ்த்தப்பட்டதா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.