உள்ளுர் கொலைகரர்களுக்கு எதிரான போராட்டங்களும் முன்னெடுகப்படவேண்டும்

அரியலூர் (திருச்சி) அருகே தலித் பெண் நந்தினியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து படுகொலை செய்திருக்கிறார் இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன். அத்துடன் நந்தினியின் பெண் உறுப்பை பிளேடால் அறுத்து 5 மாத சிசுவை வெளியே எடுத்து வீசிய கொடூரத்தையும் மணிகண்டன் செய்திருக்கிறார். அரியலூரை அடுத்த செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. தந்தையை இழந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த நந்தினி சித்தாள் வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

அப்போது கொத்தனார் வேலை செய்து வந்த இந்து முன்னணியின் ஒன்றிய செயலர் மணிகண்டன், நந்தினியை இடைவிடாமல் துரத்தி காதலித்திருக்கிறார். ஒருகட்டத்தில் நந்தினியும் உடன்பட இருவரும் காதலர்களாகி உள்ளனர்.

இதில் நந்தினி கர்ப்பமாகிவிட்டார். இதனால் தம்மை திருமணம் செய்து கொள்ளுமாறு மணிகண்டனை நந்தினி வற்புறுத்தி இருக்கிறார். மணிகண்டனோ மறுத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29-ந் தேதியன்று நந்தினியை மணிகண்டன் கடத்திச் சென்றுள்ளார். கீழமாளிகை என்ற இடத்தில் நந்தினியை அடைத்து வைத்து நண்பர்களுடன் சேர்த்து கூட்டாக 4 நாட்களாக தொடர் பலாத்காரம் செய்துள்ளார் மணிகண்டன்

பின்னர் நந்தினியை படுகொலை செய்து அவரது பெண்ணுறுப்பை பிளேடால் அறுத்து கர்ப்பப்பையில் இருந்த சிசுவை எடுத்து வீசிய கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார் மணிகண்டன். இதனிடையே டிசம்பர் 30-ந் தேதியன்றே மகளை காணவில்லை என நந்தினியின் தாய் ராசக்கிளி, போலீசில் புகார் கொடுத்தார்.

அப்போதே மணிகண்டன் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகர் மீது நந்தினி தரப்பில் போலீசாரிடம் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசாரோ மணிகண்டன் கும்பலுக்கு ஆதரவாக நடந்து கொண்டது. கடந்த ஜனவரி 14-ந் தேதியன்று கீழமாளிகை அருகே கிணறு ஒன்றில் இருந்து நந்தினியின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஆனாலும் மணிகண்டனை போலீசார் கைது செய்யவில்லை. மக்கள் போராட்டம் நடத்திய பின்னர்தான் மணிகண்டனையும் அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருந்த போதும் நந்தினியை இப்படி படுகொலை செய்ய சொன்ன மூளையாக செயல்பட்ட இந்து முன்னணி மாவட்ட செயலர் ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் போலீசார் இந்து முன்னணி மாவட்ட செயலரை ராஜசேகரை காப்பாற்றுவதிலேயே குறியாக இருப்பது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Tamil.oneindia.com)