‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய முறை அறிமுகமாகிறது’

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முதலாக இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களும் கட்டுப்பணம் கட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அகில இலங்கை வை.எம்.எம். ஏ. ​பேரவை மற்றும் யன்ங் ப்ரென்ட்ஸ் அமைப்பு உட்பட சில அமைப்புகள் இனைந்து நடத்திய, புதிய தேர்தல் முறை தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் நிகழ்வு, கண்டி- மஹியாவையில் அமைந்துள்ள கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றங்களுக்கான இப்புதிய தேர்தல் முறை, கடந்த அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட போதும், அதனை தற்போதைய ஜனாதிபதியே வர்த்தமானியில் வெளியிட்டார். அதில் எதேனும் திருத்தங்கள் இருந்தால், அதனை திருத்துவதற்கு அசோக பீரிஸின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக்குழு 203 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு அதுவும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

“இந்நிலையில் தேர்தலை நடத்த இருந்தபோதும், திருத்தம் செய்யப்பட்ட 203 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக நீதிமன்றில் ஓர் இடைக்கால தடை உத்தரவு இருக்கின்றது. இடைக்கால தடைக்கு உள்வாங்காத 133 உள்ளூராட்சி மன்றங்களில் சிறு சிறு அச்சுப்பிழைகள் காணப்படுகின்ற 40 உள்ளூராட்சி மன்றங்களையும் தவிர்த்து 93 சபைகளுக்கு தேர்தலை நடாத்த வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன. இந்நிலையில், இத்தேர்தல் முறை தொடர்பில் ஒரு விளக்கத்தை மக்கள் பெற்றுக் கொள்வது மிக முக்கியமாகும்.

“இதற்கு முன் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்போது, ஒரு போதும் கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்த வேண்டியதாக இருக்கவில்லை. ஆனால், இம்முறை முதல் முதலாக, கட்சிகள் ஊடாக போட்டியிடும் வேட்பாளர்களும் கட்டுப்பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, சுயாதீன குழு என்றால் ஒருவருக்கு 5,000 ரூபாய் வீதமும், கட்சி ரீதியில் என்றால் ஒருவருக்கு 1,500 ரூபாய் வீதமும் கட்டுப் பணம் செலுத்தப்பட வேண்டும்.

“அதேபோன்று, வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் சில சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. முழு வேட்பு மனுவும் ஆறு சந்தர்ப்பங்களிலும், ஒன்று ​அல்லது இரண்டு வேட்பாளர்களுடைய பெயர் அகற்றப்படும். மூன்று சந்தர்ப்பங்களும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

“முழுமையான வேட்பாளர்களின் எண்ணிக்கையை உள்ளடக்காத வேட்பு மனு, நி​ர்ணயிக்கப்பட்ட பெண் வேட்பாளர்களை உள்ளடக்காத வேட்பு மனு, கட்டுப் பணம் செலுத்தாத வேட்பு மனு, கட்சியின் செயலாளர் அல்லது சுயாதீன குழுவின் தலைவர் கைச்சாத்திடாத வேட்பு மனு, கட்சியின் செயலாளர், சுயாதீன குழுவின் தலைவர் அல்லது அதிகாரம் வழங்கப்பட்டவர் அல்லாது வேறு ஒருவர் சமர்ப்பிக்கும் வேட்பு மனு ஆகியன முற்றாக நிராகரிக்கப்படும்.

“எவரேனும் ஒரு வேட்பாளர் கைச்சாத்திடாவிட்டால் அவரது பெயர் நீக்கப்படும். அதேபோன்று, அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாடு பிரிவதற்கு எவ்வித உதவியும் செய்வதில்லை என்ற சத்திய கடிதம் இல்லாமல் இருந்தால், அவருடைய பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படும். மேலும், இளம் வேட்பாளர் என குறிப்பிட்ட பின் அவரது வயதை உறுதி செய்யாவிட்டாலும் அவரது பெயர் நீக்கப்படும்.

“இம்முறை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்போது அவதானமாக நடந்து கொள்வது, தமது வேட்பு மனுக்களை பாதுகாத்துக் கொள்ள கூடியதாக அமையும்” எனத் தெரிவித்தார்.