ஒருவர் அங்கலாய்ப்பது ‘குற்றமாகாது’

விஜயகலாவின் உரை தொடர்பில், தன்னிடமும் கேள்விகளைக் கேட்டனரென்று தெரித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “அந்த நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாது என்று கூறினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாரக் கேள்வி, பதிலின் போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் விசேட பொலிஸ் குழுவினரின் விசாரணை தொடர்பில் எழுப்பியிருந்த கேள்விக்கு அளித்துள்ள பதிலிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ஆம். திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் விசேட குழுவினர் வந்தனர். விஜயகலா உரையாற்றியிருந்த அந்தக் கூட்டத்தில், நானும் பங்கேற்றபடியால் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார்கள்” என்று தெரிவித்துள்ள சி.வி, அபேவர்த்தன, திலக் மாரப்பன போன்றவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகக் கூறினார்கள். விஜயகலாவின் பேச்சில் இடம்பெற்ற சில கேள்விக்கிடமான பகுதிகளைப் பற்றி, எனது கருத்தைக் கேட்டார்கள்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

“அந்த நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாதென்று கூறினேன். புலிகள் திரும்பவும் வரவேண்டும் என்று நாங்கள் பாடுபடுகின்றோம் என்று அவர் கூறியது, இந்தப் பாதுகாப்புச் சூழலையே அன்றி வன்முறைகளை மீண்டும் தொடக்கும் நோக்குடன் கூறவில்லை என்றுக் குறிப்பிட்டு, தனது கட்சிக்கு விசுவாசமாகவே இது காறும் அவர் நடந்து வந்துள்ளாரென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றேன்.

“அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், அது எமது பேச்சுச் சுதந்திரத்தைப் பாதிப்பதாகும்” என்றும் பதிலளித்தேன் என்றார்.

கேள்வி : வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா?

பதில் – இல்லை. ஒரு மாகாணத்தின் ஆளுநர் தானே பிழை செய்து விட்டு தன் பிழையை வைத்தே மாகாண ஆட்சியைக் கலைக்கமுடியுமென்றால் மத்திய அரசாங்கம் அதைச் செய்தே எல்லா மாகாணசபைகளையும் கலைத்துவிடலாம். மேன்முறையீட்டுமன்றின் தீர்ப்புக்குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்தமானியில், டெனீஸ்வரனை நான் நீக்கியது பற்றி பிரசுரிக்காமையே. வடமாகாணசபை சார்பாக, ஆளுநர் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாதுவிட்டு அதை முன்வைத்து வடமாகாண சபையை கலைக்க சட்டம் இடம் கொடுக்காது. அவைத்தலைவர் தொடர்ந்து எமது பதவிக்காலம் வரையில் அவைத்தலைவராகவே இருக்கலாம்!

கேள்வி : முழுமையான அமைச்சரவையை உருவாக்கும் ஆலோசனையை ஆளுநருக்கு வழங்குங்கள் என்று உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளார்களே?

பதில் – முதலமைச்சருக்கு நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது நான் எவ்வாறு ஆலோசனை வழங்குவது? சட்டத்துக்குப் புறம்பாக நடவடிக்கை எடுக்கப்பண்ணி என்னை மாட்டிவிடப் பார்க்கின்றார்களா எமது உறுப்பினர்கள்? ஆளுநர் செய்த பிழையை ஆளுநரே சரி செய்ய வேண்டும். டெனீஸ்வரனை நான் பதவிநீக்கம் செய்ததை அரச வர்த்தமானியில் பிரசுரிக்காத குறையை இப்பொழுதும் நீக்கலாம்.

அதாவது 2017 ஓகஸ்ட் 20ஆம் திகதி தொடக்கம் பயன்பாட்டுக்கு வரும் வகையில் இப்பொழுதும் கடந்த காலத்தை அளாவிய விதத்தில் அரச வர்த்தமானியில் பிரசுரம் இடம்பெற ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். அதன் பின் குறித்த வர்த்தமானி அறிவித்தலை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துக்காட்டி மேன்முறையீட்டுத் தீர்மானத்தைப் புறம் வைக்கலாம்.

கேள்வி : வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்க நீங்கள் எத்தனிப்பதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக கூறியுள்ளாரே? அது பற்றி?

பதில் : மகேஷ், எனது நண்பர். அவர் கூறுவது அந்த வரையில் உண்மை. எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1,000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருந்து வர எத்தனிக்கும். அதனால் பாதிப்படையப்போவது எமது இனமே. இராணுவத்தின் வேலை வடமாகாணத்தில் முடிவடைந்தபடியால் அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானது. அப்படி இராணுவம் தரித்து நிற்க வேண்டுமென்றால் நான் ஏற்கெனவே கூறியுள்ளேன் ‘இராணுவத்தை ஒன்பதாகப் பிரியுங்கள். ஒன்பதில் ஒரு பங்கை வேண்டுமெனில் ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள்’ என்று. சலுகைகளையும் சல்லியையும் தந்து இராணுவம் இங்கு நிலைபெற நினைப்பது அவர்கள் எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே.
எங்கள் மீது கரிசனை இருப்பதால் அல்ல. இவற்றை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையினரின் அரசியலுக்கு எமது சாதாரண மக்களின் வறுமையைப் பாவித்து இராணுவத்தினர் உதவ வருவது சரிபோல் தெரியும். வருங்காலத்தில் பாதிக்கப்படப் போவது எமது இன மக்களே. படைகளில் சிலருக்கு தெற்கில் ஒரு குடும்பம் வடக்கில் ஒரு குடும்பம் இருப்பது நாடறிந்த உண்மை.