கட்டலோனியாவால் திங்கட்கிழமையன்று சுதந்திரப் பிரகடனம்

ஸ்பெய்னின் கட்டலோனியா பிராந்தியம், எதிர்வரும் திங்கட்கிழமை, தனது சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்ளுமென, கட்டலோனியாவைச் சேர்ந்த பிரபல்ய ஒற்றுமை வேட்பு என்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மிரேஜா போயா அறிவித்துள்ளார். ஏற்கெனவே, இந்த வாரயிறுதியில் அல்லது அடுத்த வார ஆரம்பத்தில், சுதந்திரப் பிரகடனம் மேற்கொள்ளப்படும் என, அப்பிராந்தியத்தின் ஜனாதிபதி கார்லெஸ் புய்க்டெமொன்ட் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களால், இதற்கான தெளிவான கால வரையறை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வைத் தொடர்ந்து, சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ஸ்பெய்ன் மத்திய அரசாங்கத்துக்கு, நிச்சயமான அழுத்தத்தை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கட்டலோனியப் பிரச்சினை, உள்ளூர்ப் பிரச்சினை மாத்திரமன்று எனவும், உரிமைப் பிரச்சினையும் என முன்னர் குறிப்பிட்டிருந்த கட்டலோனிய ஜனாதிபதி, சர்வதேச மத்தியஸ்தம் தேவையெனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ள ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ராஜோயின் அரசாங்கம், பேரம்பேசல்கள் இடம்பெறுவதற்கு முன்பாக, “சட்டத்தின் பாதையில், கட்டலோனியா திரும்ப வேண்டும்” என அறிவித்திருந்தது.

கட்டலோனியாவின் சுதந்திரத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பை, ஸ்பெய்ன் அரசமைப்பு நீதிமன்றமும் அரசாங்கமும், சட்டத்துக்குப் புறம்பானவை என்று ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அவ்வறிவிப்பைப் புறக்கணித்தே, இவ்வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. எனவே தான், சட்டத்தின்படி செயற்படுமாறு, அரசாங்கத் தரப்பிலிருந்து அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் இவ்வாறான பதற்றமான நிலைமை காரணமாக, ஸ்பெய்னின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யூரோ வலயத்தின் 4ஆவது மிகப்பெரிய பொருளாதாரமான ஸ்பெய்னில் ஏற்பட்டுள்ள இப்பாதிப்புகள் காரணமாக, யூரோவின் மதிப்பும் குறைவடைந்துள்ளது. எனவே, சுதந்திரப் பிரகடனத்தை கட்டலோனியா மேற்கொள்ளுமாயின், இப்பாதிப்புகள் மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.