காணாமற்போன மூவர் சிறையில் உள்ளனர்

வவுனியா முத்தையன்கட்டு மற்றும் புளியம்பொக்கணை ஆகிய இடங்களிலிருந்து, 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போனதாகத் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் மூவர், மாலைதீவுகளிலிருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு, வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனது இளைய சகோதரன், 2005இல் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றிருந்த போது, காணாமற்போயிருந்ததாகவும் சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகளின் பின்னர், தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், மாலைதீவுகள் சிறை ஒன்றில் தான் உள்ளதாகக் கூறியதாகவும் அவர்களை நேரில் சென்று பார்த்துவிட்டுத் திரும்பிய கௌரிராஜா கவிதா தெரிவித்துள்ளார்.

தனது சகோதரன் உட்பட 3 இளைஞர்களும் மாலைதீவுகள் சிறையிலிருந்து, இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார். கணேஸ் இராமச்சந்திரன், நவரத்தினராசா ரஞ்சித், முத்துலிங்கம் யோகராஜா ஆகிய மூவரும் மாலைதீவுகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் தெளிவில்லாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(நன்றி: பி.பி.சி தமிழோசை)