காலநிலை மாற்றத்திற்கும், உள்நாட்டுப் போர்களுக்கும் இடையிலான தொடர்பு

காலநிலை மாற்றத்திற்கும், உள்நாட்டுப் போர்களுக்கும் இடையிலான தொடர்பை பலர் கவனிப்பதில்லை. 2006 – 2011 காலப் பகுதியில், சிரியாவில் கடுமையான வரட்சி நிலவியது. அதற்கு முன்பிருந்தே, நீர் நிலைகளில் தண்ணீரின் அளவு ஐம்பது சதவீதம் குறைந்தது. விவசாயத்தை நம்பி வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள், நகரங்களை நோக்கி நகர்ந்தார்கள். சிரிய அரசு, பணப் பயிர்களாக கருதப் பட்ட, கோதுமை, பருத்தி உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியதால், பிற உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் தவறாக கையாளப்பட்ட நீர்ப்பாசனமும் விவசாய உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. கிராமங்களில் இருந்து வந்து குடியேறிய மக்களால், நகரங்களில் சனத்தொகை பெருக்கம் அதிகரித்தது. ஏற்கனவே ஈராக் போர் காரணமாக இடம்பெயர்ந்து வந்த அகதிகளும் ஏராளமாக இருந்தனர். அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
மக்கட்தொகைப் பெருக்கம், விவசாய உற்பத்தி வீழ்ச்சி, வரட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி போன்ற அனைத்துக் காரணங்களும், அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்திருந்தன. (நன்றி: Le Monde diplomatique, september 2015)