கிழக்கிலிருந்த 160 இந்தியர்கள் நாடு திரும்பினர்

அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 பஸ்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 2 பஸ்களிலும் இவர்கள் கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றனர்.

புடவை வியாபாரத்துக்காகவும் சுற்றுலா விசாவிலும் இலங்கைக்கு வந்த இவர்கள், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தங்கியிருந்தனர்.

கல்முனையிலிருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் காத்தான்குடி வழியாக சென்ற இவர்களுக்கு, காத்தான்குடியில் வைத்து பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் உபசரிப்புக்களை செய்ததுடன், இவர்களுக்கான காலை உணவையும் ஏற்பாடு செய்து கொடுத்தது.

இதில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார் உட்பட சம்மேளன அலுவலக பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாக, தமது சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியான நிலையில் இலங்கையில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகளை, இந்தியா அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து எடுத்த நடவடிக்கையின் பயனாக, இவர்கள் கப்பல் மூலம் இந்தியா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதன்படி, இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில், கிழக்கு மாகாணத்தில் சிக்கியிருந்த 160 பேர் உட்பட700 இந்திய பிரஜைகள், தமது நாட்டுக்கு இன்று (01) அனுப்பிவைக்கப்பட்டனர்.