குழப்பங்களை வழங்குகிறார் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு, இன்னமும் 3 வாரங்களுக்குக் குறைவான நாட்களே உள்ள நிலையில், சர்ச்சைக்குரியவரான ட்ரம்ப்பின் சர்ச்சைகள், குறைந்தபாடாக இல்லை. ட்ரம்ப் தெரிவான ஜனாதிபதித் தேர்தலில், ட்ரம்ப்புக்கு ஆதரவாக, ரஷ்யாவின் அரசாங்கம் செயற்பட்டது எனவும் ஐ.அமெரிக்க இணையத்தளங்களை ஹக் செய்தது எனவும், ஐ.அமெரிக்க புலனாய்வுத்துறையினர் வழங்கிய அறிக்கையையடுத்து, ரஷ்யாவைச் சேர்ந்த 35 பேரை, உளவுபார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில், ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியேற்றினார். இரண்டு சொத்துகளும் முடக்கப்பட்டன.

அதற்கான எதிர்ப்பு நடவடிக்கையாக, ஒரு தொகுதி அமெரிக்கர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென ரஷ்ய வெளிவிவகார அமைச்சுப் பரிந்துரைத்த போதிலும், அதை ஏற்றுக்கொள்ள, ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மறுத்து, பதில் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

புட்டினுக்கு நெருக்கமானவரான ட்ரம்ப், 20ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில், அதுவரை காத்திருக்குமுகமாகவே, இந்த நடவடிக்கையை புட்டின் எடுத்தார் என்று கருதப்பட்டது. புட்டினின் அந்த அறிவிப்பு வந்த பின்னர், தனது டுவிட்டர் தளத்தில் நேற்று கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் “தாமதிக்க (விளாடிமிர் புட்டின்) எடுத்த முடிவு சிறப்பானது. அவர், அதிபுத்திசாலி என்பதை நான் எப்போதும் அறிந்திருந்தேன்” என்று குறிப்பிட்டார். இது, ஐ.அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக, இன்னொரு நாட்டின் ஜனாதிபதிக்கு, ஐ.அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி கருத்துத் தெரிவிப்பதாகவே கருதப்பட்டது.

பின்னர், புத்தாண்டு வாழ்த்தைப் பதிந்த ட்ரம்ப், “எனது பல எதிரிகளுக்கும் எனக்கெதிராகப் போராடி, மிக மோசமாகத் தோற்று, தற்போது என்ன செய்வதெனத் தெரியாமலிருப்போர் உள்ளிட்ட அனைவருக்கும், புத்தாண்டு நல்வாழ்த்துகள். அனைவருக்கும் அன்பு” என்று குறிப்பிட்டிருந்தார். இது, ஹிலாரி கிளின்டனுக்கு வாக்களித்த மக்களை, தனது எதிரிகளோடு அவர் ஒப்பிடுவதாகவே கருதப்பட்டது.

பின்னர் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து, தனக்கு இன்னமும் நம்பிக்கையில்லை என்ற ரீதியில் கருத்துத் தெரிவித்ததோடு, ஈராக்கில் பாரிய அழிவுமிக்க ஆயுதங்கள் காணப்படுகின்றன என 2003ஆம் ஆண்டில் புலனாய்வு அமைப்புகள், தவறாகக் கூறியமையையும் சுட்டிக்காட்டினார். எனவே, உறுதியான ஆதாரம் இல்லாவிடில், குற்றஞ்சாட்டக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.