கேப்பாபுலவு அ​டையாளம் தெரியவில்லை

 

படையினர் வசமுள்ள கேப்பாப்புலவு கிராமத்தில், பொதுமக்களின் வீடுகள் பல அழிக்கப்பட்டுள்ள நிலையில், ​மக்களின் பூர்வீகக் காணிகளையும் அடையாளம் காண முடியாதவாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிரதேசமானது, பொதுமக்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளையும் பாடசாலை, கோயில், தேவாலயம், பொதுநோக்கு மண்டபம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் உள்ளடங்கலாக, நான்கு கிராமங்களையும் உள்ளடக்கியிருந்தது.

இந்நிலையில் அந்தப் பிரதேசம் முழுவதும், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இன்று வரை, படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்றது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், வற்றாப்ளையில் உள்ள சீனியாமோட்டை என்ற இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத் தொழில் இன்றியும் பல்வேறு நெருக்குதலுக்கு முகங்கொடுத்தவாறுமே, அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏழு தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்த தங்களது பூர்வீகக் கிராமத்தை விடுவிக்கக் கோரி, கடந்த 14 நாட்களாக, கிராமத்தின் முன்பக்கத்தில் அமைந்துள்ள படைமுகாம் முன்பாக, அக்கிராம மக்கள், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாப்புலவு பூர்வீகக் கிராமத்திலிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான வீடுகள் பல அழிக்கப்பட்டுள்ளதுடன், காணிகளை அடையாளம் காண முடியாதவாறு, சின்னாபின்னம் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அக்கிராமத்தில் புதிதாக, பௌத்த விகாரை, இராணுவ விளையாட்டுத்திடல் மற்றும் படைக் காவலரண்கள் என்பவற்றை அமைத்துள்ளனர். இதனால், கேப்பாப்புலவுக் கிராமம், அடையாளம் காண முடியாதவாறு காணப்படுகின்றது.
இதேவேளை, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் பொதுமக்களுக்குச் சொந்தமான பெருமளவான கால்நடைகளும் காணப்படுகின்றன.

குறித்த கிராமத்தின் எல்லையோரத்தில் காணப்படுகின்ற வனங்களை மீள்உருவாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பட்ட பெறுமதியான தேக்குமரங்கள் பல அழிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.