கேள்விகளை எழுப்பியுள்ள ட்ரம்ப்பின் புதிய நியமனம்

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், அவரது முதற்கட்ட நியமனங்களை மேற்கொண்டுள்ளார். வெள்ளை மாளிகைக்கான இரண்டு பிரதான நியமனங்களே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவரது நியமனம், கேள்விகளை எழுப்பியுள்ளது.

வெள்ளை மாளிகையின் பணியாட் தொகுதியின் பிரதானியாக, குடியரசுக் கட்சியின் தேசிய செயற்குழுவின் தலைவர் றெய்ன்ஸ் பிறீபஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதான உத்தியாளராக, பிறெய்ட்பெய்ட் நியூஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவராக இருந்த ஸ்டீவன் பனொன் நியமிக்கப்பட்டுள்ளார். இதில், ஸ்டீவன் பனொனின் நியமனே கேள்விகளை எழுப்பியுள்ளது.

தீவிர வலதுசாரிப் போக்குடையவரான பனொன், இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்திவரும் வலதுசாரிப் பிரிவுகளுடன் நெருக்கத்தைக் கொண்டவர். அவர் பணியாற்றிய ஊடகமான பிறெய்ட்பெய்ட், பெண்கள், குடியேற்றவாதிகள், முஸ்லிம்கள், இலத்தினோக்கள், கறுப்பினத்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான செய்திகளைப் பிரசுரிப்பதில் முக்கியத்துவம் வழங்கிவந்தது.

இனவாதக் கொடியான அமெரிக்கக் கூட்டாண்மைக் கொடியை ஆதரிக்கும் செய்திகள், “உங்களுடைய பிள்ளைக்கு பெண்ணியம் இருப்பதையா அல்லது புற்றுநோய் இருப்பதையா விரும்புவீர்கள்?” போன்றன, அவ்வூடகத்தின் செய்திகளின் உதாரணங்களாகும்.

வெள்ளை மாளிகையின் உத்தியாளர் என்பவர், ஜனாதிபதியின் போக்கைத் தீர்மானிக்கக்கூடிய ஆலோசகராவார். எனவே, பனொனின் நியமனம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது.