சகோதரிகளின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்கள்தெனிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய வீடமைப்புத்திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி, மேற்படி மண்சரிவில் பாதிக்கப்பட்ட இரண்டு சகோதரிகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மக்கள்தெனிய வீடமைப்பில் நிரற்படுத்தப்பட்டுள்ள பெயர் பட்டியலில், தமது பெயர் உள்வாங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சகோதரிகள் இருவர் பண்டாரவளை நகர பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள சுற்று வட்டத்தில் செவ்வாய்க்கிழமை (20) சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பித்தனர். மீரியபெத்த தோட்டத்தில் இரு குடும்பங்களாக இரு வீடுகளில் குறித்த சகோதரிகள் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை கையளிப்பது தொடர்பில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, குறித்த சகோதரிகள் இருவரில் ஒருவருக்கு மாத்திரமே வீடு கிடைக்கப்போவதாக, பிரதேச செயலகம் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே சகோதரிகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் வரை இந்தப்போராட்டத்தை விடப்போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.