சமஸ்டித் தீர்வை உருவாக்க இந்தியா தலையிட வேண்டும்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமஸ்டி ஆட்சிமுறையை உருவாக்க இந்தியா தலையீடு செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, மேற்படிப்புக்காக இந்தியா சென்று திரும்பியவர்களை வரவேற்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்ததாக பிபிசி சந்தேசய தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் நடராஜனும் கலந்து கொண்டிருந்தார். “தமிழ் மக்கள் ஆபத்தான அரசியல் சூழலில் இருந்த போது தமிழ் மக்களைக் காப்பாற்ற எவ்வாறு இந்தியா தலையிட்டதோ அது போன்றே, இப்போதும் கூட இந்தியா இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தின் பேரில் தான், இந்திய – இலங்கை உடன்பாட்டின் கீழ், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் கொண்டு வந்தது. அந்த திருத்தத்தின் விளைவாகவே, அதிகாரங்களில்லாவிடினும், வடக்கு கிழக்கிற்கு இரண்டு மாகாணசபைகள் கிடைத்துள்ளன. போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்கள் புயலுக்குள் சிக்கியுள்ளனர். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு சமஸ்டியே ஒரே வழி என்பதை இந்தியா புரிந்து கொண்டிருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.