’சரணடைந்தவர்களை புலிகளே சுட்டுக் கொன்றார்கள்’

இராணுவத்தினரிடம் சரணடைந்த ரமேஷ் கொல்லப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, தான் அவ்வாறு கூறவில்லை எனவும் ஊடகங்களே தவறான செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்த எஸ்.பி.திஸாநாயக்க “கருணா அம்மான் புலிகள் அமைப்பிலிருந்து விலகியதும், கிழக்கு மாகாணத்தின் தளபதியான ரமேஷ், பிரபாகரனால் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

இறுதியில் ரமேஷ் படையினரிடம் சரணடைந்தப் போது. அவர் கொலை செய்யப்பட்டார். ரமேஷ் சரணடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, தான் சரணடையப் போவதாக எனக்கு தொலைபேசி ஊடாக அறிவித்திருந்தார்” என கூறியிருந்தார்.

இதேவேளை, இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண தளபதி ரமேஷை இராணுவம் கொலை செய்யவில்லை எனவும், தமிழீழ விடுதலை புலிகளே அவரை சுட்டுக் கொன்றார்கள் எனவும் தெரிவித்தார்.

பொதுமக்கள், வயதான பெண்கள் குழந்தைகள் என சரணடைந்த
பலரையும் புலிகளே சுட்டுக் கொன்றதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.