சரி, விஜயதாச, ப. டெனிஸ்வரன் போய்விட்டார்; ஊழல் போய்விடுமா?

கடந்த வாரம், வடக்கிலும் தெற்கிலும் இரண்டு முக்கிய பதவி நீக்கங்கள் இடம்பெற்றன. தெற்கில், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த 23ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். வடக்கில், வட மாகாண போக்குவரத்து அமைச்சராகவிருந்த ப. டெனிஸ்வரன் அம்மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இருவருக்கும், அவர்களின் கட்சிகளால் தமது பதவியை இராஜினாமாச் செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் பதவி விலகாததனாலேயே, பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் ஒரே குற்றச்சாட்டையே அவர்களது கட்சியால் சுமத்தப்பட்டு, இராஜினாமாச் செய்யுமாறு கோரப்பட்டு இருந்தனர். கூட்டுப் பொறுப்பை மீறியமையே அந்தக் குற்றச்சாட்டாகும்.

விஜயதாச, அரசாங்கத்தின் பிரதான பொருளாதார திட்டமொன்றான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்தை பகிரங்கமாக விமர்சித்ததைக் காரணம் காட்டியே, ஐக்கிய தேசியக் கட்சி அவரை பதவி நீக்கம் செய்யுமாறு, ஜனாதிபதியை கேட்டுக் கொண்டது.

டெனிஸ்வரன், அவரது கட்சியான டெலோ என்றழைக்கப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் அனுமதியில்லாது, கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றில் கையெழுத்திட்டார் என்று குற்றஞ்சாட்டியே, அக்கட்சி அவரை பதவி நீக்கம் செய்யுமாறு, முதலமைச்சரை கேட்டுக் கொண்டது.

அந்தக் குற்றச்சாட்டு இல்லாவிட்டாலும், அவர்களை பதவி நீக்கம் செய்ய, அவர்களது நிர்வாகம் சந்தர்ப்பம் வரும் வரை காத்துக் கொண்டு தான் இருந்தது. அதற்கான வாய்ப்பை அவ்விருவருமே வழங்கினர்.

முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்காமையே ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்துக்கும் விஜயதாசவுக்கும் இடையிலான உண்மையான முறுகலுக்கு காரணமாகும்.

அதற்கிடையே, ஹம்பாந்தோட்டை திட்டத்தை விமர்சித்து, விஜயதாச ஐ.தே.கவுக்கு பிடி கொடுத்துவிட்டார்.

அதேபோல் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவொன்றால் வட மாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டதை அடுத்து, அவர்கள் இராஜினாமாச் செய்த போது, தமக்கு மட்டுமே தெரிந்த காரணத்துக்காக, டெனிஸ்வரன் உள்ளிட்ட குற்றவாளிகளாகக் காணப்படாத ஏனைய இரண்டு அமைச்சர்களையும் நீக்கிவிட முதலமைச்சர் விரும்பினார்.

ஆனால், அவர்கள் அதற்கு உடன்படவில்லை. அவ்வாறு இருக்க, டெனிஸ்வரன் தமது கட்சியைப் புறக்கணித்து செயற்பட்டு, தமது கழுத்தில் தாமே சுருக்கிட்டுக் கொண்டார்.

விஜயதாச, டெனிஸ்வரன் இருவரும் இப்போது இன உணர்வை தூண்டி மக்கள் ஆதரவை தேட முயற்சிக்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இருவருக்குமிடையே எத்தனை ஒற்றுமைகள்.

அது ஒரு புறமிருக்க, கடந்த 10ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்த ரவி கருணாநாயக்கவே, விஜயதாசவின் பதவி நீக்கத்துக்கும் வழி சமைத்தார் எனலாம். ஏனெனில், ரவியின் பதவி துறப்பை அடுத்து, ஐ.தே.கவுக்குள் ஏற்பட்ட ஆத்திரமே, விஜயதாசவின் பக்கம் திரும்பியது.

இறுதியில், கடந்த ஆட்சி காலத்தின்போது இடம்பெற்ற ஊழல்களை விசாரித்து, ஊழல் பேர்வழிகளுக்கு தண்டனை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, எந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததோ, அந்த அரசாங்கத்தின் இரு அமைச்சர்களுக்கே ஊழல் காரணமாகவே பதவி இல்லாமல் போயிற்று. கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற எந்தவோர் ஊழல்பேர்வழிக்கும் தண்டனை வழங்க, அரசாங்கத்தால் இன்னமும் முடியாமல் உள்ளது.
முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதில், நீதி அமைச்சர் என்ற முறையில் விஜயதாச இழுத்தடிப்பு செய்தார் என ஐ.தே.க சுமத்தும் குற்றச்சாட்டு, முற்றிலும் ஆதாரமற்றது எனக் கூற முடியாது.

ஏனெனில், ஊழலை ஒழிக்க வாக்குறுதி அளித்துவிட்டு பதவிக்கு வந்து ஊழல் விசாரணைகள் தாமதமாவதாக, ஐ.தே.க அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறும் போதெல்லாம், விஜயதாச அந்த தாமதத்தை நியாயப்படுத்தினார். நீதி அமைச்சர் என்ற முறையில், அந்த விசாரணைகளை துரிதப்படுத்த என்ன செய்யலாம் என, அவரிடம் இருந்து ஒரு யோசனையேனும் வரவில்லை.

ஆனால், ஐ.தே.க அவரது விடயத்தில் நடந்து கொண்ட விதம், நேர்மையானதா என்ற கேள்வியும் எழுகிறது. முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான விசாரணைகள் இழுத்தடிக்கடுகின்றன என்ற குற்றச்சாட்டு புதியதல்ல.

இந்த தாமதத்துக்கான காரணம், தமக்கும் தெரியாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் கூறியிருந்தார். ஊடகவியலாளர்கள், அந்தத் தாமதத்தைப் பற்றி கேள்வி எழுப்பிய போதெல்லாம், நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், தீர விசாரித்துதான் ஒருவரை கைதுசெய்யவும் முடியும் என அமைச்சர்களே அந்த தாமதத்துக்கு காரணம் கற்பித்தனர்.

அதேவேளை, இந்தத் தாமதத்துக்கு நீதி அமைச்சர் தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழாமல் இருக்கவில்லை. எனினும், அது மிகவும் மிருதுவான குற்றச்சாட்டாகவே இருந்தது. இருந்த போதிலும், ரவி கருணாநாயக்கவுக்கு பதவி விலக நேர்ந்ததை அடுத்து, ஐ.தே.க தலைவர்கள் நீதி அமைச்சர் மீது பலத்த அழுத்தத்தை தொடுக்கலானார்கள்.

இது தம்மில் ஒருவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததனால், அதனை சமப்படுத்த அல்லது அதனை மூடி மறைக்க முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்களின் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற தேவையே.

தம்மில் ஒருவருக்கு இந்தப் பிரச்சினை ஏற்படாதிருந்தால், அவர்களிடம் இந்த ஆக்ரோஷம் காணப்படுமா என்பது சந்தேகமே. எனவே, விஜயதாச விடயத்தில் ஐ.தே.கவின் நடவடிக்கை நேர்மையானதா என்ற கேள்வியை எழுகிறது.

விஜயதாசவின் கீழிருந்த சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தமது கட்சியின் உதவித் தலைவரும் வெளிநாட்டமைச்சருமான ரவியை எவ்வாறு ஒரு திருடனைப் போல் மடக்கினார்கள் என்ற ஆதங்கம் ஐ.தே.க தலைவர்களின் மனதில் இருந்தது.

அத்தோடு, முன்னாள் தலைவர்கள் விடயத்தில் விஜயதாச காட்டும் மிருதுவான போக்கும் அவர்களது கோபத்தை பன்மடங்காக்கியது. ஆனால், அதற்காக அவரை வெளியேற்ற முடியாது. அதற்காகத் தான் கூட்டுப் பொறுப்பை மீறினார் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அது உண்மைதான். ஆனால், விஜயதாச ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை விமர்சித்த முதலாவது முறை இதுவல்ல. இதற்கு முன்னரும் அவர் அதனை நாடாளுமன்றத்திலேயே விமர்சித்து அதன் விடியோவை தமது முகநூலில் பதிவு செய்துள்ளார். அதேபோல் இந்த அரசாங்கத்தில் கூட்டு பொறுப்பை மீறிய ஒரே அமைச்சர் விஜயதாச அல்ல.

முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான விசாரணைகளை கிடப்பில் போட விஜயதாச நடவடிக்கை எடுத்தார் என்றோ அல்லது அந்த விசாரணைகள் அசாதாரணமாக தாமதமாகின்றன என்றோ மாறாக ரவி மீதான விசாரணையின் போது சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அசாதாரண வேகத்தில் செயற்பட்டார்கள் என்றோ ஐ.தே.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கலாம்.

ஆனால், அதனால் ரவி ஒன்றும் நிரபராதி ஆகப் போவதில்லை. ரவி என்ன செய்து மாட்டிக் கொண்டார் என்பதை கவனியாது, சட்ட மா அதிபர் திணைக்களம் ரவியை எவ்வாறு நடத்தினார்கள் என்பதைப் பற்றி மட்டும் ஐ.தே.க ஆத்திரப்படுவதாக இருந்தால், அக்கட்சியின் ஊழல் எதிர்ப்பு எவ்வாறானது என்பதை ஊகித்துக்கொள்ள வேண்டியது தான்.

ரவி கடந்த 10ஆம் திகதி இராஜினாமாச் செய்தார். 18ஆம் திகதி விஜயதாச மீது நம்பிக்கையில்லை என ஐ.தே.க செயற்குழுவும் நாடாளுமன்ற குழுவும் கூட்டாக நடத்திய கூட்டமொன்றில், தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்த நிலையில், தாம் பதவி விலக வேண்டும் அல்லது ஐ.தே.க ஜனாதிபதி மூலம் தம்மை பதவி நீக்கம் செய்யும் என்பது விஜயதாசவுக்குத் நன்றாகத் தெரியும். ஆனால், அவர் தாம் தூக்கியெறியப்படும் வரை இராஜினாமாச் செய்யாமல் இருந்தது ஏன் என்பது பரியாத புதிராக இருக்கிறது.

தாம் பதவியிலிருந்து நீக்கப்படுவது அவமானமாகவும் விருப்பமின்றியேனும் தாமாகவே இராஜினாமாச் செய்வது அதை விட மேல் என்றும், பொதுவாக அரசில்வாதிகளும் உயர் மட்ட அதிகாரிகளும் கருதுகிறார்கள். எனவே, ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்தாலும் அவருக்கு இராஜினாமாச் செய்ய சந்தர்ப்பம் வழங்கபபடுவது வழக்கம். ஆனால், கீழ் மட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இது போன்ற தன்மானம் இல்லை என்று கருதப்படுவதனாலோ என்னவோ அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

திலக் மாரப்பன, ரவி கருணாநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் டெனிஸ்வரன் ஆகியோருக்கு அந்த அடிப்படையிலேயே முதலில் இராஜினாமாச் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. அவர்களில் விஜயதாசவும் டெனிஸ்வரனும் இராஜினாமாச் செய்ய மறுத்தமையால், பதவி நீக்கம் செய்யப்பட்டனர். விஜயதாச இராஜினாமாச் செய்ய மறுத்தது மட்டுமல்லாமல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பிரபல கூற்றொன்றை நினைவூட்டி, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவை மறைமுகமாக தாக்கவும் முற்பட்டார்.

தமக்கு பாதுகாக்க குடும்பமோ குமாரனோ இல்லை என ஒரு முறை ஜே.ஆர்.ஜயவர்தன கூறினார். தாம் குடும்ப ஆதிக்கத்தை ஆதரிப்பவரல்ல என்பதையே அவர் அதன் மூலம் கூறினார். ஆனால், எதிர்க் கட்சியினர் அதற்கு வேறு பொருளை கற்பித்தனர். அந்தக் கூற்றைக் குறிப்பிட்ட விஜயதாச, குடும்பம் – குமாரன் இல்லை என்று சிந்திப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்றும், அது நாட்டுக்கு சாபக்கேடு என்றும் கூறினார்.

.ஐதே.கவுக்கும் அவருக்கும் இடையே அப்போது நிலவிய பலத்த முறுகல் நிலையையும் ஜே.ஆரின் உறவினரான பிரதமருக்கு பிள்ளைகள் இல்லாததையும் கருத்திற் கொள்ளும் போது, அவர் எங்கு தாக்குகிறார் என்பது தெளிவாகியது.

நாட்டின் சொத்துகளை வெளிநாட்டவருக்கு விற்கும் தீர்மானங்களை எடுக்கும் இந்த அமைச்சரவையில் இருப்பது வெட்கக்கேடான விடயம் என, பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அவர் கூறினார். ஆனால், தாம் தூக்கியெறியப்படும் வரை அவர் அந்த ‘வெட்கக்கேடான’ நிலையில் இருந்துவிட்டார்.

இப்போது விஜயதாச, தாம் ஒரு தேசப்பற்றாளர் என்று காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். நாட்டின் வளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடுப்பதற்கு தாம் இதுவரை செய்தவற்றை அவர் இப்போது பட்டியல் போட்டு காட்டுகிறார்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் துறைமுக நகரம் சீன நிறுவனமொன்றுக்கும் காலிமுகத்திடல் அருகே முன்னர் இராணுவத் தலைமையகம் இருந்த நிலம் ஷங்கிரிலா நிறுவனத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட போது, அவர் வாய் திறக்கவில்லை என்பது சகலரும் அறிந்த விடயம்.

இப்போது அவர் தேசப்பற்றாளராக தம்மை காட்டிக் கொள்ள எடுக்கும் முயற்சியைப் பார்க்கும் போது, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தேசப்பற்றாளராகிய கதை ஞாபகத்துக்கு வருகிறது. மக்கள் விடுதலை முன்னணி, அவரை 2008ஆம் ஆண்டு வெளியேற்றும் வரை அவர் ஒரு மாக்ஸியவாதியாகவும் சோஷலிச புரட்சியை ஆதரிப்பவருமாகவே இருந்தார்.

அக்கட்சி அவரை வெளியேற்றியவுடன், அவர் திடீரென கடும் சிங்கள பௌத்த தேசியவாதியகவும் இனவாதியாகவும் மாறிவிட்டார். பதவிகள் இல்லாத போது மக்கள் ஆதரவைப் பெற பலர் இது போல் இன உணர்வை உதவிக்கு அழைக்கிறார்கள்.

டெனிஸ்வரனும் இதைத் தான் செய்கிறாரோ என்ற சந்தேகம் எழும் வகையிலான ஒரு கருத்தை அவர் வெளியிட்டு இருந்தார். தாம் முன்னாள் புலிப் போராளிகளுக்கு உதவ முன்வந்தமையினாலேயே டெலோ கட்சி தம்மை அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாக, அவர் கூறியிருந்தார்.

விஜயதாச வெளியேற்றப்பட்டுவிட்டார். இப்போது அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தினரையும் கூண்டில் அடைக்குமா? அவர்களுக்கு எதிராக பெருமளவில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள அந்த வழக்குகளை துரிதப்படுத்த பொறிமுறையொன்றை உருவாக்குவாரா என்பதை இந்த அரசாங்கத்தை பதவியில் அமர்த்திய மக்களும் சிவில் சமூக அமைப்புகளும் மஹிந்தவின் ஆட்சியில் வெகுவாக பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளின் தாமதம் விடயத்தில் சட்ட மா அதிபர் திணைக்களத்தை விமர்சிக்கக் கூடாது என்றும் அது நீதித்துறையில் தலையிடுவதற்கு சமம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், சட்ட மா அதிபர் என்பவர் ஒரு நீதிபதி அல்ல.

அவர் அரசாங்கத்தின் சட்டத்தரணி. பல வழக்குகளில் அவரும் தோல்வியடைந்திருக்கிறார். அரசாங்கத்துக்கு எதிரான வழக்குகளின் போது அவரே அரசாங்கத்துக்காக வாதாடுகிறார். எனவே, அரசாங்கம் அவருக்கு ஆலோசனை வழங்குவதை குறை கூற முடியாது.

அதேவேளை, இந்த அரசாங்கம் பதவிக்கு வரும் போது மக்களுக்கு வழங்கிய பிரதான வாக்குறுதிகளில் ஊழல் ஒழிப்பும் ஒன்றாகும். அதற்காக பொறிமுறைகளை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையுமாகும்.