சிரியாவில் தொண்டு நிறுவன வாகனங்கள் மீது தாக்குதல்

சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் தொண்டு நிறுவனம் ஒன்றின் லாரிகள் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் டிரைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 12 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்தியில், “போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக சிரியா ராணும் அறிவித்த சில மணி நேரத்தில், அலெப்போ நகருக்கு அருகில் உரும் அல்-குப்ரா பகுதியில் ரெட் கிரெஸென்ட் தொண்டு நிறுவன லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் லாரி டிரைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 12 பேர் உயிரிழந்தனர். சிரியா அல்லது ரஷ்ய போர் விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தாக்குதல் தொடர்பாக சிரியா அரசு தகவல் அளிக்க மறுத்துவிட்டது.

இந்தத் தாக்குதலை சர்வதேச செஞ்சிலுவை கமிட்டி (ஐசிஆர்சி) உறுதி செய்துள்ளது. இதுகுறித்து ஐசிஆர்சி செய்தித் தொடர்பாளர் இங்கி செட்கி கூறும்போது, “மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதான இந்தத் தாக்குதலால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளோம்” என்றார். அலெப்போ நகரில் இருந்து கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் புறநகர் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லும் பணியில் இந்த லாரிகள் ஈடுபட்டு வந்ததாக ரெட் கிரெஸென்ட் கூறியுள்ளது.

இதனிடையே சிரியாவில் அனைத்து மனிதாபிமானப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஐ.நா. அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனிதாபிமான முகமையின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லெர்கி நேற்று கூறும்போது, “சிரியாவில் உதவிப் பொருள்கள் விநியோப் பணியில் ஈடுபட்டுள்ள லாரிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.