சிரியா தொடர்பில் ஐ.அமெரிக்காவுடன் ரஷ்யா முறுகல்

“சிரியாவிலுள்ள ரஷ்யத் துருப்புகள் மீது, ஐக்கிய அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும், வேண்டுமென்றே ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன” என, ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் சேர்ஜெய் லவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார். “ஐ.அமெரிக்காவின் விசேட படைகளுக்கும் ஐ.அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் ஆயுததாரிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையில், சந்தேகத்துக்கிடமான வகையில் நேசமான உறவுகள் காணப்படுகின்றன” எனக் குற்றஞ்சாட்டிய அவர், “சிரிய இராணுவத்தின் முன்னேற்றத்தைத் தணிக்க, ஐ.அமெரிக்கா முயல்கிறது” எனவும் குற்றஞ்சாட்டினார்.“சிரியாவிலுள்ள ஐ.அமெரிக்கா தலைமையிலான படைகளிடம், ஏராளமான கேள்விகள் உள்ளன. ஒன்றில், அவர்கள் தற்செயலாக சிரியத் துருப்புகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்த, அதன் பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள், தாக்குதலைத் தொடுக்கிறார்கள். இல்லையெனில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இல்லையெனில், எங்களுடைய இராணுவப் பணியாளர்கள் மீது, அவர்களே ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்” என்று தெரிவித்தார்.

சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், சிரியாவில், ஐ.அமெரிக்காவும் அதன் கூட்டணிப் படைகளும், “வேண்டாத விருந்தாளிகள்” என்று தெரிவித்த அவர், “பயங்கரவாதிகளை, மோசமானவர்கள், அந்தளவுக்கு மோசமில்லாதவர்கள் என்று, ஐ.அமெரிக்க பிரிக்கிறது” என்றும் குற்றஞ்சாட்டினார்.