’சிவாஜிலிங்கத்துக்கு எனது சொந்தப் பணத்திலேயே கட்டுப்பணம் செலுத்தினேன்’

நல்லூரில் அமைந்துள்ள யாழ். பாடி விருந்தினர் விடுதியில், .ன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 1987இல் இந்தியப்படை இங்கு வந்தபோது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போரை உருவாக்கினார்.

“இந்தியப்படை வெளியேறட்டும் என்று சொல்லிப் பதவிக்கு வந்த ரணசிங்க பிரேமதாசவும் ‘ஈழம் தவிர எல்லாம் தருவேன்’ என்று சொல்லி ஆறாம் சட்டத்திருத்தத்தை மாற்றலாம் என்றும் சொல்லி பின்னர்அதை மாற்றாது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தார். போரை நோக்கி நகர்ந்தார்.

“பின்னர் சமாதானப் புறாவாகத் தன்னைக் காட்டிக்கொண்டு ஜனாதிபதிப் பதவிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கொடிய போர் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டார். அவரைத் தொடர்ந்து வந்த மஹிந்த ராஜபக்ஷ இன அழிப்புப் போரின் உச்சிக்கே சென்றார். பின்னர் வந்த மைத்திரிபால சிறிசேன ‘நல்லாட்சி’ என்ற பெயரில் தமிழர் தாயகத்தின் மீது ஒரு மரபுரிமை இனஅழிப்புப் போரையே தொடுத்திருக்கிறார்.

“அநுராதபுரத்தையும் பொலன்னறுவையையும் மய்யமாகக் கொண்டது அவரது சிந்தனை. இது வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக உடைக்கும் திட்டம். நல்லிணக்கம் என்ற பெயரில் நடாத்தப்படும் ஒரு புதுவிதமான போர். “இதற்கு கிழக்கில் கன்னியாவும் வடக்கில் நீராவியடியும் சாட்சி. இந்தப் போர்கள் எல்லாம் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பின் ஒவ்வொரு பரிமாணங்களாக அடுத்தடுத்த கட்டப்படி முறைகளாக விரிகின்றன. தொடரும் இந்தப் போர்களின் அடுத்த வடிவத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ற போட்டியே தற்போது தென்னிலங்கையில் நடக்கவிருக்கிறது.

“இந்தத் தருணத்தில் ஈழத்தமிழர்களான நாங்கள் மேற்கொள்ள வேண்டிய தெரிவு என்ன? சொல்ல வேண்டிய செய்திதான் என்ன? கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியின் அநுராகுமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப் பேரினவாதத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை.

“இவர்களுடன் தமிழர்தரப்பு பேரம் பேசவேண்டும் என்று சிலர் வாதிடுகிறார்கள். பேரம் பேசும் போது அவர்கள் தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்பதற்கு எந்தவித ச்சர்வதேச உத்தரவாதமும் இல்லாமல் பேரம் பேசுவதில் உண்மையில் ஒருபலனும் இல்லை. சிங்களப் பேரினவாதத் தலைவர்களுடன் பேரம்பேசுதல் என்பது தற்போதைய நிலையில் செல்லாக்காசு போன்றது.

“எழுதிய ஒப்பந்தங்களையே கிழித்துப்போடும் சிங்களப் பேரினவாதத் தலைவர்களுடன் பேரம் பேசுவதில் பலன் ஏதும் இல்லை. மாறாக இவர்களை இயக்கும் சர்வதேச சக்திகளுடன் தான் நாங்கள் பேரம் பேச வேண்டும். அமெரிக்காவும் இந்தியாவும் இன்று இறுக்கமாகப் பின்னிப்பிணைந்த ஓர் அணியாகச் செயற்படுகின்றன.

“இந்து-பசிபிக் கடற்போர் முனையில் சீனாவுக்கெதிரான வியூகம் வகுப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஜப்பானுடனும் அவுஸ்திரேலியாவுடனும் நான்முனைச்சக்திகளாக இணைந்திருக்கின்றன. இந்து சமுத்திரம் போர்ச்சூட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

“2009இல் இருந்த பூகோளப் போட்டா போட்டியை விட தற்போதைய இந்து சமுத்திரக் கேந்திர முக்கியத்துவம் பல மடங்கு வீச்சாகியிருக்கிறது. அமெரிக்காவும் இந்தியாவும் நினைத்திருந்தால் கோட்டபாய ராஜபக்ஷவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழலை இலகுவாகத் தோற்றுவித்திருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.
“இராணுவத் தளபதியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்ட போது அதைக் கண்டித்த சர்வதேசத் தரப்புகள் ஐ.நாவில் சமாதானப்படைக்கான இலங்கையின் பங்களிப்பைக் குறைக்கவுள்ளதாக இலங்கை அரசுக்கு ஒரு செய்தியைச் சொல்லி மிரட்டிய சர்வதேசச் சமூகம் ஷவேந்திர சில்வாவுக்கே நடைமுறையில் கட்டளைத் தளபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் களமாட அனுமதித்தது மட்டும் ஏன் என்ற கேள்வி எழுகிறது.

“அமெரிக்காவிலே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குகள் மனித உரிமை நிறுவனங்களால் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் காரணம்காட்டி அமெரிக்க அரசு அவரது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்ய முடியாது என்று மறுத்திருக்கலாம். அதை வெளிப்படையாகவே ஒரு அறிக்கையிட்டுச் சொல்லியிருக்கலாம். ஏன் செய்யவில்லை?

“மறுபுறத்தில் சஜித் பிரேமதாஸ போட்டியாளராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். அவரும் ஹம்பாந்தோட்டையின் பிரதிநிதி. ஜனாதிபதி ஆட்சியின் நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் விரும்புவது போலத் தெரிந்தாலும், அப்படியெல்லாம் செய்வதாகத் தான் ஒத்துக் கொள்ளவில்லை என்ற தோரணையிலேயே சஜித் பிரேமதாஸ இயங்குகிறார்.

“ஒற்றையாட்சியைக் கைவிடப்போவதில்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ‘ஒற்றையாட்சியை மாற்றாமல் அதிகளவு அதிகாரப் பரவலாக்கம்’ என்று அவர் சொல்லியிருப்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு வெற்றுக் கோசமே.

“அவரின் தகப்பன் சொன்ன ‘எல்லாம் தருவேன் ஈழம் தவிர என்பதை’வரலாற்றில் பார்த்துவந்தவர்கள் தான் நாம் என்பதை மறந்து விடக் கூடாது. தென்னிலங்கையைப் பொறுத்தவரை இனவாத அரசியலையார் அதிகம் பேசுகிறார்களோ அவர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்ற மன நிலை சிங்கள மக்கள் மத்தியில் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது” என்றார்.