சுமந்திரனின் யோசனையை நிராகரித்தார் முதல்வர்!

யாழ்.நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையினர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவை நியமிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட யோசனையை நிராகரித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், நகர அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பிலான விடயம் ஆராய எடுக்கப்பட்டது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில், கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உலக வங்கிக் குழுவினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையினரைத் தனித் தனியே சந்தித்துக் கலந்துரையாடிக் கொண்டிருக்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையினர், உள்ளூராட்சி மன்றத்தினர் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை, மாவட்ட அபிவிருத்திக் குழுவில் தெரிவு செய்து அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தலாம் என்ற யோசனையே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இது தொடர்பிலான ஒரு குழுவைத் தெரிவு செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்தபோது, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் தலைமையில் செயற்படுத்தலாம். உள்ளூராட்சி மன்றங்களும் வடக்கு மாகாண சபைக்குள்ளேயே வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுமானால் உங்கள் கருத்துக்களை எங்களிடம் முன்வைத்தால் அதனையும் ஆலோசிப்போம்-என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைகளை உலக வங்கியிடம் நேரடியாக முன்வைக்கலாம். ஆனால், நகர அபிவிருத்தித் திட்டத்தை இலகுவாகவும் விரைவாகவும் முன்கொண்டு செல்வதற்கு இந்தக் குழுவை நியமிப்பது பொருத்தமானது என்றார். இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் நீங்கள் அவ்வாறு தனியாகச் செய்வது என்றால் செய்யுங்கள். வடக்கு மாகாண சபையின் தலைமையில்தான் செயற்படுத்தலாம் என்றார். இதனால் ஆலோசனைக் குழு அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.