டக்ளஸிடம் விசாரணை?

ஈ பி டி பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்னை நீதிமன்றம் காணொளி மூலம் விசாரணைகளை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும் 5ஆம் திகதி இந்த விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினரான டக்ளஸ் தேவானந்தா 1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுகரசு என்ற நபரை சுட்டுக் கொலை செய்துள்ளதாகவும், பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்பு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவர் இலங்கையில் வசித்து வருவதனாலும் வழக்கு விசாரணைகளுக்கு பிரசன்னமாக முடியாத நிலை காணப்படுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்தார். அத்துடன், தன்னிடம் காணொளி மூலம் விசாரணைகளை நடாத்துமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்ததுடன், சென்னை உயர்நீதிமன்றம் அதற்கான உத்தரவை ஏற்கனவே பிறப்பித்திருந்தது. இதனடிப்படையில், டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளி மூலம் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.