இலங்கை அதிபராக இருந்த ராஜபக் ஷேவின் அமைச்சரவையில், தொழில் துறை அமைச்சராக இருந்தவர் டக்ளஸ் தேவானந்தா. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவராகவும் உள்ளார்.இவர், 1986ம் ஆண்டில், சென்னை, சூளைமேட்டில் தங்கியிருந்த போது, அந்த பகுதியில் தகராறு ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பலியானார். டக்ளஸ் தேவானந்தா உட்பட, ஒன்பது பேர் மீது சூளைமேடு போலீசார், கொலை வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில், டக்ளஸ் தேவானந்தா ஜாமின் பெற்று, இலங்கை சென்று விட்டார். மற்றவர்கள் தலைமறைவாகினர். இவ்வழக்கு, சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டக்ளஸ் தேவானந்தா பல முறை ஆஜராகவில்லை. இதையடுத்து, ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கை அமைச்சராக, டில்லிக்கு டக்ளஸ் வந்த போது, அவரை கைது செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடுத்தார். ‘வாரன்ட்’ ரத்து செய்யக் கோரி, டக்ளஸ் தேவானந்தாவும், மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலமாக, டக்ளஸ் தேவானந்தாவை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை தாமதமாகி வருவதால், டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாக பிரித்து விசாரிக்க, அரசு கூடுதல் வழக்கறிஞர் பிரபாவதி மனு தாக்கல் செய்தார். தனியாக விசாரணை நடத்துவதற்கு, வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சாந்தி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி சாந்தி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசு வழக்கறிஞர் பிரபாவதி சமர்ப்பித்தார். டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில், போலீஸ் தரப்பு சாட்சிகள், 18 பேரும், 2016 ஜன., 18ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராக, ‘சம்மன்’ அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.