டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வு கிளிநொச்சியில்

 

டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் நடந்தது. மிகக்குறைந்தளவானவர்களே கலந்து கொண்டனர். ஊடகங்கள் எதுவும் அவரின் இறுதி நிகழ்வு பற்றிய செய்திகளையோ அவரைப்பற்றிய விவரங்களையோ வெளியிடவில்லை. அவர் ஒரு காலங்கடந்த மனிதராகவே ஊடகங்களால் கைவிடப்பட்டிருந்தார். குறைந்த பட்சம் இணையத்தளங்களையும் முகப்புத்தகத்தையும் பார்த்துக்கூட அவரைப்பற்றிய தகவல்களை அறியும் நிலையில் இலங்கைத்தமிழ் ஊடகங்கள் இருக்கவில்லை. அல்லது அவர் புளட்டுடன் அடையாளம் காணப்பட்டவர் என்பதால், தற்போது அவர் எந்தப் பட்டியலில் (துரோகியா தியாகியா ) உள்ளார் என்ற குழப்பத்தில் அவரைப்பற்றி எழுதவும் வெளிப்படுத்தவும் தயங்கியிருக்கலாம். இறுதி நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆனால் டேவிட் ஐயா எந்த இடம் பெயர்ந்து வந்த மலையக மக்களின் ஈடேற்றத்துக்காக முன்னின்று உழைத்தாரோ, யாருடைய வாழ்க்கை முன்னேற்றம் காண வேண்டும் என்று விளைந்தாரோ அவர்களில் இருந்து ஒருவர் கூட உரையாற்றவில்லை. அப்படி ஒருவருக்கான இடமும் கிடைக்கவில்லை. அவரைச் சிலர் தமக்கான நிகழ்கால – எதிர்கால அரசியலுக்குத் தத்தெடுக்க முனைந்ததுதான் ஆகப் பெரிய அவலமாக இருந்தது.

(Sivarasa Karunagaran)