ட்ரம்ப்பை எதிர்க்கிறார் இம்ரான் கான்

பாகிஸ்தான் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதன்மூலம், ஒரு காலத்தில் மிக நெருங்கிய தோழமை நாடுகளாக இருந்த இவ்விரு நாடுகளும், தமக்கிடையிலான முரண்பாடுகள் மூலம், அதிக இடைவெளியே ஏற்படுத்திய வண்ணமுள்ளன.

ஐ.அமெரிக்கத் தொலைக்காட்சியொன்று நேர்காணொலொன்றை வழங்கிய ஜனாதிபதி ட்ரம்ப், ஐ.அமெரிக்காவுக்காக எந்தவொரு விடயத்தையும் பாகிஸ்தான் செய்திருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியதோடு, பாகிஸ்தானுக்கான உதவிகளை, தேவையில்லாமலேயே ஐ.அமெரிக்கா வழங்கி வந்ததெனவும் தெரிவித்து, அவ்வுதவிகளை நிறுத்துவதற்காக எடுத்த முடிவை நியாயப்படுத்தினார்.

எனினும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்துள்ள பிரதமர் கான், 2001ஆம் ஆண்டு, ஐ.அமெரிக்காவுடனான இராணுவக் கூட்டணியில் இணைந்த பின்னர், பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.

“போரில், பாகிஸ்தானைச் சேர்ந்த 75,000 பேர் கொல்லப்பட்டனர். அத்தோடு, 123 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர், பொருளாதாரத்தில் இழப்பு ஏற்பட்டது. ஐ.அமெரிக்காவின் ‘உதவி’, வெறுமனே 20 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்” என, பிரதமர் கான், கோபத்துடன் பதிலளித்தார்.

இந்தப் போர் காரணமாக, தமது நாட்டைச் சேர்ந்த பழங்குடிச் சமுதாயங்கள் பாதிக்கப்பட்டு, அவர்களது வீடுகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர் எனத் தெரிவித்த அவர், இப்போர் காரணமாக, சாதாரண பாகிஸ்தானியர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதேபோன்று, ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள ஐ.அமெரிக்கப் படையினருக்குத் தேவையான வீதி உட்பட விநியோகப் பாதைகளை, பாகிஸ்தான் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்டி அவர், இவ்வாறான தோழமை நாடொன்றை, ஜனாதிபதி ட்ரம்ப்பால் எடுத்துக்கூற முடியுமா எனக் கேள்வியெழுப்பினார்.

ஐ.அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுவரும் பின்னணியில், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு, மிகவும் நெருக்கமடைந்து வருகிறது. பாகிஸ்தானின் நம்பிக்கைக்குரிய தோழமை நாடாக, சீனா மாறி வருகிறது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள இம்முரண்பாடு, தெற்காசியப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவிரும்பும் சீனாவின் நோக்கத்துக்கு, மிக முக்கியமான உதவியாக அமையுமெனக் கருதப்படுகிறது.