தங்கூசி வலையால் ஏற்படும் பாதிப்புக்கள்

தங்கூசி வலையால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன என்று சில நண்பர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல பதிவுகளில் மிகத் தெளிவாக விளங்கப் படுத்தி விட்டேன்.  களைப்பாய் இருக்கிறது. இப்படிச் சொல்லிவிட்டு விடவும் முடியாதல்லவா. இதை மீண்டும் மீண்டும் சொல்வதைத் தவிர வேறென்ன வெட்டிப் புடுங்குற வேலை எனக்கு இருக்கக் கூடும்.

சுருக்கமாகச் சொல்கிறேன்:
பிளாஸ்டிக், பொலித்தீன் பூமிக்கு ஏற்படுத்தும் பாதிப்பைவிட தங்கூசி பல வகையில் நிலத்திலும் கடலிலும் ஏற்படுத்துகிறது.
தவிர, தங்கூசிவலை கடலில் விரித்து வைக்கப் பட்டிருக்கும்போது கடலில் உள்ள நீரோட்டத்தின் வேகத்தில் ஒருவகை விண் கூவுவது போன்ற ஒலியை ஏற்படுத்துகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் மிரட்சியடைந்து அந்தப் பகுதியை விட்டே வேறு பிரதேசங்களுக்குக் குடி பெயர்ந்து விடுகின்றன.

அடுத்து, மிகவும் குறுகிய விட்டத்தைக் கொண்ட தங்கூசி வலைகளைப் பாவிப்பதால் மிகச் சிறு மீன்களும் அகப்பட்டு மடிந்து, காலக் கிரமத்தில் அழிந்து விடுகின்றன.
தங்கூசி வலைகளின் பாவனை 6இல் இருந்து எட்டு மாதம்தான். அதற்குப் பின் அதனைக் கடலிலும், தரையிலும் வீசி விடுகிறார்கள். இவை பலநூறு வருடங்கள் அழியாமல் நிலத்தையும், நில வளத்தையும், கடல் வளத்தையும் மாசடையச் செய்கின்றது. கடலில் கைவிடப்படும் இந்த வலைகளால் பல கடல்வாழ் நுண்ணுயிர்கள் அழிந்து விடுகின்றன.
தரையில் இவற்றைக் கைவிடுவதால் நிலவளம் பாதிக்கப் படுவதுதோடு, நிலத்தில் வாழும் ஊர்வன, பறவையினம் போன்றவற்றின் அழிவுகளுக்கும் காரணமாகி விடுகின்றன.

இதில் பிடிக்கப்படும் மீன்கள் ஒருசில மணித்தியானத்திலேயே கெட்டு விடுகின்றது. இயற்கையாகவே மீனின் உடலைப் பாதுகாக்க அமைந்துள்ள மீனின் இழையம், பாதுகாப்புப் பசை, செதில் உடைவைப் பாதுகாக்கும் பிசின் போன்றவை அதிக பாதிப்புக்கும் உள்ளாகி விடுகின்றது. இதனால் இந்த மீன்களை மிகவும் விரைவாக பக்டீரியாக்கள் தாக்கி விடுகின்றன……
இதுபோல் இன்னும் நிறையப் பாதகங்கள்.

தரையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சென்று கலப்பதால் ஏற்படும் விளைவுகள் பல. அவற்றிலொன்று ஆமை, பெருமீன்கள் போன்றவை இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளை கடித்து மெல்வதற்கு நெகிழ்வுத் தன்மையாயிருப்பதால் இரையென உட்கொண்டு இறந்து விடுகின்றன.
அதுபோல் கடலில் கைவிடப்படும் இந்தத் தங்கூசிக் கழிவுகளை உட்கொண்டு மடியும் கடல்வாழ் உயிரினமோ கணக்கிலடங்காதவை.

அண்மைக் காலமாக வடக்குக் கிழக்கின் கடற்பிரதேசங்களில் மேல்மீன் கள் மிகவும் அருகி வருகின்றன. (வாளை, மணலை, கயல், சாளை, சூடை, தேறகை போன்ற தெத்திப் பாயும் மீனினங்கள்)

பாரம்பரிய மீனவர்களை அடியோடு அழித்து, அவர்களிடமிருந்து கடலையும் கரைகளையும் பறித்து பன்நாட்டு முதலாளிகளின் கைகளில் தாரைவார்க்கும் திட்டம் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்ற நாசகாரன் எம்.எஸ்.சுவாமிநாதனின் நீலப் புரட்சி” என்ற சதித் திட்டத்தோடு தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, 2009இற்குப் பின் இலங்கைக்கும் பரவி விட்டது.

இந்தச் சதித் திட்டங்களுக்கு எமது மீனவர்கள் பலியாகாமல் விழிப்படைய வேண்டிய கட்டாயத் தேவை இப்போ எழுந்துள்ளது.
எமது மீனவர்கள் தமது தாய்க்கும் தாயான கடல் அன்னைமீது கருணை கொண்டு, இந்தத் தங்கூசிவலை என்ற நச்சுக் கொடிகளை அவளது மடியில் விதக்காமல், நிராகரித்துக் கைவிட வேண்டும்.

இதுபற்றிய விபரங்கள் வலைத்தளங்களில் நிச்சயம் நிறைய இருக்கும். பஞ்சியைப் பாராமல் தேடி அறியுங்கள் நண்பர்களே.

(Thamayanthi Simon)