தனி அலகு அத்தியாவசியமில்லை? ஹிஸ்புல்லா!

நாட்டை ஐந்து பிராந்தியங்களாக பிரிக்க வேண்டும் எனத்தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகயை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காகவே அவர்களால் இத்திட்டம் சூசகமாக போடப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைக்கப்படுமாயின் மீண்டும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு மோதல்கள் ஏற்படுமே தவிர ஒருபோதும், அது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களுடன், வட மத்திய மாகாணத்தையும் இணைத்துக் கொண்டு ஒரு பிராந்தியமாக மாற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்குமா?

என நான் கேள்வி கேட்கின்றேன். அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவிப்பார்களாயின் பிராந்திய தீர்வுத் திட்டத்துக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவது தொடர்பில் நாங்கள் சிந்திக்க முடியும். வடக்கு கிழக்கு இணைந்திருந்த போதே நாங்கள் முஸ்லிம்களுக்கு தனி அலகு வேண்டும் என வலியுறுத்தினோம். எனினும், இன்று வடக்கு கிழக்கு பிரிந்துள்ள நிலையில் எமக்குத் தனி அலகு அத்தியாவசியமில்லை. த.தே.கூ. கூறுவது போன்று வடக்கு கிழக்கு இணைக்கப்படுமாயின் அதில் முஸ்லிம்களின் விகிதாசாரம் 16% ஆகும். அதனால் முஸ்லிம்களின் தேவை அங்கு நிறைவேற்றப்படும் என்று உறுதியாக கூற முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதி நிரந்தரமாக நீடிக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும், இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்பதிலே நாம் மிகத்தெளிவாக இருக்கின்றோம். ஆனால், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதன் மூலம் அது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது. இன்று சிலர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் பூரண ஆதரவினை வழங்குகின்றோம். ஆகவே, இனப்பிரச்சினைக்கு தீர்வு வடக்கு கிழக்கு இணைப்பு அல்ல. மாறாக நாட்டில் உள்ள 9 மாகாணங்களும் தனித்துவமாக இயங்கக்கூடிய வகையில் 13 ஆவது திருத்தச் சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்பட வேண்டும். பொலிஸ், காணி போன்ற அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் தமது மாகாணத்துக்கு தேவையானவற்றை நிறைவேற்றக் கூடியவர்களாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.