தமிழக அரசு – அரசின் மதுவிலக்கு நோக்கிய அறிவிப்புக்கு அமோக வரவேற்பு

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை குறைத்தும், 500 கடைகளை மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவு இன்னும் ஒரு வாரத்துக்குள் நடைமுறைக்கு வரும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு மதுவிலக்கு கோரி நீண்ட போராட்டம் நடத்தி வரும் பல்வேறு தரப்பினரும் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த அறிவிப்பினால் ஏற்படும் சாதக, பாதங்களையும், கூடுதலான கோரிக்கைகளையும் சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

அறிவிப்பின் சாதகங்கள்

* தமிழக அரசு பதவியேற்ற உடனே இதனை அறிவித்திருப்பது மதுவிலக்கு கோரும் சமூக ஆர்வலர்களுக்கு அதிமுக அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் இன்னும் சில ஆண்டுகளிலாவது தமிழகம் பூரண மதுவிலக்கு என்கிற நிலையை அடையும் என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள் அவர்கள்.

* தற்போது தமிழகம் முழுவதும் 6,826 மதுக்கடைகள் இருக்கின்றன. சுமார் 5000 குடி மையங்கள் (Bars) இருக்கின்றன. அதேசமயம், தற்போது தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் அருகிலும் நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுமார் 760 மதுக்கடைகளை அகற்ற கோரி நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் நடந்துவருகின்றன. எனவே, டாஸ்மாக் அதிகாரிகள் தமிழகத்தின் 5 டாஸ்மாக் மண்டலங்களில் இருக்கும் 35 டாஸ்மாக் மாவட்டங்களில் தலா 14 கடைகளை அகற்ற முடிவு செய்துள்ளனர். இந்த 14 கடைகளும் மேற்கண்ட கோயில், கல்வி நிறுவனங்களின் அருகிலும், நெடுஞ்சாலைகளிலும் இருக்கும் கடைகளே. இதனால், கல்வி நிறுவனங்கள், கோயில்கள் அருகே சண்டை சச்சரவுகள் குறையும். குடியிருப்புவாசிகள் நிம்மதியாக இருக்கலாம். நெடுஞ்சாலைகளில் மது போதையால் நடக்கும் விபத்துகள் குறையும் என்று நம்பலாம்.

* தற்போதைய டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை நிலவரப்படி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 20%, 12 மணி முதல் 6 மணி வரை 10%, 6 மணி முதல் 8 மணி வரை 40%, 8 மணி முதல் இரவு 10 மணி வரை 30% மது விற்பனை நடக்கிறது. காலையில் நடக்கும் விற்பனையில் பெரும் பகுதி முற்றிய நிலையில் இருக்கும் குடி நோயாளிகளையே சார்ந்துள்ளது. காலையில் 10 மணிக்கு கடை திறந்தவுடன் மது அருந்தியே ஆக வேண்டிய கட்டாய உடல்/மன நிலையில் இருப்பவர்கள் இவர்கள். இதன் மூலம் இவர்கள் படிப்படியாக மதுவின் பிடியிலிருந்து வெளியே வர பிரகாசமான வாய்ப்பிருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதங்கள் என்ன?

* கள்ளத்தனமான மது விற்பனை அதிகரிக்கும். மதுக்கடைகள் காலை 10 முதல் இரவு 10 மணி வரை செயல்படும்போதே கள்ளத்தனமாக கூடுதல் விலையில் மது விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தற்போதைய நேரக் குறைப்பால் கள்ள சந்தையில் மது விற்பனை மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் நேரிடும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையையும் அரசு எதிர்கொள்ள வேண்டும்.

* தற்போது டாஸ்மாக் பணியாளர்களில் சுமார் 1700 பேர் பல்வேறு காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். தற்போது 500 கடைகள் குறைக்கப்படுவதன் மூலம் ஒரு கடைக்கு 3 பேர் விதம் மொத்தம் 1500 பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

500 கடைகளை மூட உத்தர விட்ட அதேசமயம் குடி நோயை கட்டுப்படுத்துவதற்கான எந்த அ றிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. கடைகளை மூடுவது, நேரம் குறைப்ப தன் மூலம் குடியை தவிர்ப்பவர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக் கும் ஆரம்ப கால பிரச்சினைகளுக்கு (Withdrawal symtems) அரசு தரப்பில் எந்த தீர்வும் சொல்லப்படவில்லை.

கோரிக்கைகள் என்ன?

* மதுக்கடைகளில் அதிகம் விற்பனையாகும் நேரம் மாலை 7 மணி முதல் 9 மணி வரைதான். எனவே, மதுக்கடைகள் நண்பகல் 12 மணி முதல் 7 மணி வரை மட்டுமே இயங்க உத்தரவிட வேண்டும்.

* குறைக்கப்பட்ட கடைகளின் பணியாளர்களுக்கு உடனடியாக டாஸ்மாக் அல்லாத அரசு நிறுவனத்தில் மாற்று வேலை வழங்க வேண்டும்.

* புதிய கடைகள் திறக்கப்படாது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

* தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கும் 3000 குடி மையங்கள் உட்பட மொத்தமிருக்கும் 6000 குடி மையங்களையும் மொத்தமாக, உடனடியாக மூட வேண்டும். இதன் மூலம் சுமார் 60% குடி நோயை கட்டுப்படுத்த முடியும்.

* சிறப்பு அழைப்பு மையங்களை அமைக்க வேண்டும். டாஸ்மாக் முறைகேடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க தற்போது 10581 என்கிற எண் உள்ளது. இந்த எண்ணை பிரபலப்படுத்துவதுடன் கூடுதலாக அழைப்பு மையங்களை உருவாக்கி புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஒவ்வொரு டாஸ்மாக் மாவட்டத் துக்கும் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். வாரம் ஒருமுறை இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சீர்திருத்த நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* தமிழக அரசு ‘மதுவிலக்கு செயல் திட்டம் 2021’-ஐ அறிவிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை கடைகள் மூடப்படும் என்பதையும் மொத்தமாக அனைத்து மதுக்கடைகளையும் மூடி பூரண மதுவிலக்கு எந்த ஆண்டில், எந்த மாதத்தில் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்க வேண்டும்.

இதற்கிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் மது மீட்புக்கென்று சிறப்பு மருத்துவ மையங்களை அமைக்க வேண்டும்.
தொடர்புடையவை
விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: முதல்வர் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள்