தமிழர் விடுதலைக் கூட்டணியும் 11 கோரிக்கைகளை முன்வைத்தது

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி தலைமையில் வவுனியாவில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய செயற்குழு சுமார் நான்கு மணி நேரங்களாக கூடி ஆராய்ந்து 11 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்க தீர்மானித்துள்ளனர்.

இந்திய அரசியல் சாசனத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார பரவலாக்கல் முறையிலான அதிகார பரவலாக்கல் வழங்கப்படவேண்டும். அத்துடன் தென்னாபிரிக்காவில் உள்ள அடிப்படை உரிமைச்சட்டத்தினையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதனை முதன்மை கோரிக்கைகளாக கொண்டே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் எடுத்துச்சென்று கலந்துரையாடுவதற்காக செயற்குழு உறுப்பினர் அரவிந்தன் தலைமையிலான நால்வர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவினை கட்சிக்கு அறிவித்த பின்னர் தீர்மானம் மேற்கொண்டு எந்த வேட்பாhளருக்கு ஆதரிப்பது என மக்களுக்கு அறிவிக்கும் எனவும் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, “ஜனாதிபதி வேட்பாளருடன் கதைக்கவேண்டிய அவசியம் உள்ளதை உணர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி 15 வருடங்களாக முன்வைத்துள்ள இந்திய ஆட்சி முறையிலான அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதனை முதன்மையாக கொண்டு நாம் ஜனாபதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடவுள்ளோம்.

இதற்கு சிங்கள மக்களிடமும் பெருமளவு வரவேற்பு உள்ளது. அத்துடன் அரசாங்கம் இதுவரை செய்யாத மற்றும் செய்யத்தவறிய விடயங்களை முன்வைத்துள்ளோம். ஆகவே எந்த வேட்பாளர் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றாரோ அவருக்கு எமது ஆதரவு இருக்கும்” என தெரிவித்தார்,

கட்சியின் செயலாளர் சங்கையா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் கோரிக்கைகளை ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

“இந்திய ஆட்சி முறைமையில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார பரவலாக்கல் முறை வழங்கப்படவேண்டும். அத்துடன் தென்னாபிரிக்காவில் உள்ள அடிப்படை உரிமைச்சட்டத்தினையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

“தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பொதுமன்னிப்புடன் கூடிய விடுதலை அளிக்கப்படவேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மைத்தன்மையை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

“வடக்கு கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்க முன்னர் இருந்த இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனைய அனைத்து முகாம்களும் மூடப்படவேண்டும்.
இன மத குரோதங்களை தூண்டும் செயற்பாடுகளுக்கு கடும் தண்டனை வழங்கும் குற்றமாக அறிவிக்கப்படவேண்டும்.

“வடக்கு – கிழக்கில் திட்டமிட்டு இடம்பெறும் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த சிங்கள மயமாக்கலை தடுத்து நிறுத்தவேண்டும்.

“கடந்த 10 வருடங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும் போராளிகளுக்கும் இதுவரை எதுவிதமான உதவிகளும் வழங்கப்படாத நிலையில் அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்வுக்கு திரும்ப வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவேண்டும்.

“வடக்கு கிழக்கில் வேலைவாய்ப்புக்களுக்கு அந்தந்த மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்காத அதிகாரிகளுக்கு சட்டத்தின் ஊடாக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

“காலத்திற்கு காலம் இயற்கை அனர்த்தங்களாலும் வேறு பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும்.

“வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு நாடு முழுவதுமாக 1970 இற்கு முன் இருந்த கூப்பன் முறையில் உப உணவுப்பொருட்களை பகிர்ந்தளிக்கவேண்டும்.

“விடுதலைப்புலிகளின் காலத்தில் அடைவு வைக்கப்பட்ட நகைகள் ஒரு பகுதியினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவருக்கும் வழங்கப்படவேண்டும் என்பதுடன் அவர்களிடம் பெறப்பட்ட தங்கங்களும் அவர்களுக்கு திரும்ப வழங்கப்படவேண்டும்.” என்றார்.