‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கூட்டு துரோகி கூட்டு’ – சி.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமென தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் முன்னர் கூறிய போது அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் எதிர்த்தனர். அவர்களைத் துரோகிகள் என்று அழைத்தனர் என்றுத் தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், துரோகிகள் என்று அழைத்த எமது கட்சியினர் தான், உள்ளூராட்சி சபைகள் பலவற்றில் அந்தத் ‘துரோகி’களுடன் இப்போது கூட்டு வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பொருளாதார விருத்தியே எமக்குத் தற்போது வேண்டும் என்ற கருதியிருந்திருந்தால், அரசாங்கத்தின் ஊடாகப் பொருளாதார விருத்தியை மற்றவர்கள் பெறுவதை நாங்கள் தடைச் செய்திருக்கக்கூடாது. துரோகிகள் என்று அவர்களை அடையாளப்படுத்தியிருக்கக்கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாரந்தம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர், நேற்று (02) அனுப்பிவைத்திருந்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கேள்வி : நீங்கள், சம்பந்தனுக்கு எழுதிய கடிதத்தில் கோரப்பட்டதற்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவசக்தி ஆனந்தன் எம்.பியை தவிர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியின் செயலணி கூட்டத்தில் கலந்துள்ளார்களே. அது பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் : எனக்கு சந்தோஷந்தான்.

கேள்வி : அது எப்படி?

பதில் : எனக்கு மட்டுந் தரப்பட்ட ஓர் அரசியல் மற்றும் பொருளாதார விருத்தி சம்பந்தமான சலுகையை நான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத்தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன் என்று தெரிகின்றது. இதன்போது எமது அரசியல் கருத்து வேறுபாடுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. எதனைக் கூறச் சிரமப்பட்டேனோ அதனை இந்த நிகழ்வு தெட்டத் தெளிவாக்கிவிட்டது.

மாகாணசபை கலைய இரண்டு மாதங்கள் உண்டு. நாடாளுமன்றம் கலைய இரண்டு வருடங்கள் உண்டு. இந்நிலையில் செயலணியை நியமித்து செயலாற்ற முன்வந்திருப்பது அரசியல் காரணங்களுக்காக என்று தெரிகிறது. அதே போல் அதில் சேர்ந்து செயலாற்ற எம்மவர்கள் முன்வந்திருப்பதும் அரசியல் காரணங்களுக்காகத்தான் என்று தெரிகிறது.

என்னைப் பொறுத்த வரையில் கட்சி அரசியல் ஒரு பொருட்டல்ல. எவ்வளவு வேகமாக ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுத் தரமுடியும் என்பதே எனது கரிசனை. நாங்கள் யாவரும் ஒன்றிணைந்து இராணுவத்தினருடன் சேர்ந்த தெற்கத்தையப் பெரும்பான்மையினரின் செயலணி ஓர் அரசியல் செயல்பாடே என்று கூறி எமக்கு அரசியல் தீர்வே தற்போது முக்கியமென்ற கருத்தை முன்வைத்திருந்தால் தமிழ் மக்களின் அரசியல் பலமற்ற நிலையும் தமிழ் மக்களின் உரித்துக்களை வழங்க அரசாங்கம் பின்னிற்கும் பாங்கும் வெளிக் கொண்டு வரப்பட்டிருப்பின். உலக நாடுகளில் இதை எடுத்துக்காட்டியிருக்கலாம். தற்போது தம்மைத் தாழ்த்தி என்னை ஏற்றி விட்டிருக்கின்றார்கள் எனது கட்சியினர்.

எமது கொள்கை ரீதியான வேறுபாடுகள் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளன. உடனே அரசியல் தீர்வு அவசியம் என்று கூறிய எனது வாசகம். சம்பந்தன் இந்த வருட முடிவுக்கு முன்னர் அரசியல் தீர்வு என்று கூறியதன் பிரதிபலிப்பேயாகும். இப்போது அரசியல் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. பொருளாதார விருத்தியும் எம்மவர் கைவசம் இருக்கப் போவதுமில்லை. செயலணியின் 46 பேரே காய்களை நகர்த்துவார்கள்.

ஆனால், ஜனாதிபதிக்கு நான் எழுதிய கடிதத்தில் நீங்கள் உங்கள் ஒருதலைப்பட்சமான பொருளாதார விருத்திகளை உங்களுக்கு வேண்டுமென்றால் செய்து கொண்டு போங்கள். ஆனால், என்னை அதற்குள் உள்நுழைக்காதீர்கள் என்றே கூறியிருந்தேன். பொருளாதாரப் பயன்களைக் காட்டி எமது அரசியல் தீர்வைத் தாமதப்படுத்துவதே அரசின் எண்ணம். அத்துடன் பொருளாதார ரீதியாக நாங்கள் வடக்குக் கிழக்கைக் கவனித்து வருகின்றோம் என்று ஜெனிவாவில் அரசாங்கம் கூற இந்த செயலணியைப் பாவித்து வருகின்றது என்பதை எமது நாடாளுமன்ற அங்கத்தவர்கள் உணராதிருப்பது விந்தையாக உள்ளது. முதற்கூட்டத்திலேயே, ஜனாதிபதி முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்கப் பார்த்தார். அதனால்த்தான் அன்றே விபரங்கள் எடுத்து அடுத்த நாள், சிங்கள குடியேற்றம் உண்மையில் நடந்துள்ளதென்பதை அனுமதிப் பத்திரமொன்றைப் பிரசுரித்ததால் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டினேன்.

நான் செயலணியில் பங்குபற்றினாலும் இரண்டு அல்லது மூன்று கூட்டங்களுக்கு மேல் பங்குபற்ற முடியாது. ஆகவே அரசியல் ரீதியாக எமது கட்சிக்குள்ளேயே எமது சிந்தனைகள் எவ்வாறு அமைகின்றன என்று கணிக்க இந்த விடயம் அனுசரணையாக அமைந்துள்ளது. அந்த அளவில் எனக்கு மகிழ்ச்சியே.

4. கேள்வி – வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண அமைச்சர்கள் சம்பந்தமாக எழுந்திருக்கும் சட்டப்பிரச்சனையை ஒரு நிமிடத்தில் தீர்க்க முடியும் என்று கூறியுள்ளாரே. அது எப்படி?

பதில் – அவைத்தலைவர் என்ன கருத்தில் அவ்வாறு சொன்னாரோ தெரியாது. ஆனால் அவர் கூறுவது போல் ஒரு நிமிடத்தில் இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம். சென்ற வருடம் ஓகஸ்ட் மாதத்தில் டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்த விடயத்தை அப்பொழுதிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் இலங்கை வர்த்தமானியில் பிரசுரிக்க இந்தச் சிக்கல் தீரும். உரியவாறு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பினால் அது சிக்கலைத் தீர்க்கும். கையெழுத்திட ஒரு நிமிடம் தேவையில்லை.

பலர் தற்போதிருக்கும் ஐந்து அமைச்சர்களில் ஒருவரை நீக்குமாறு நான் சிபாரிசு செய்ய வேண்டும் என்றும் அவர் இடத்தில் டெனீஸ்வரன் வர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். அது நடைமுறைச் சாத்தியம் அற்றது. காரணம் ஓர் அமைச்சரைப் பதவி இறக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று தெளிவாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆகவே, எந்த ஒரு பதவி இறக்கத்தையும் என்னால் செய்ய முடியாது. ஏற்கெனவே சிபாரிசு செய்தாகிவிட்டது. அதை வலுப்படுத்த ஆளுநர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர் தான்தோன்றித்தனமாக ஒரு அமைச்சரை நீக்கிவிட்டு, டெனீஸ்வரனை உள் ஏற்றால் குறித்த அமைச்சர் நீதிமன்றம் செல்வார். தான் உரியவாறு ஆளுநரால் நியமிக்கப்பட்டவர் என்ற ரீதியில் ஆளுநர் தம்மை நீக்க முடியாது என்று வாதாடுவார். மேலும் முதலமைச்சரின் சிபாரிசு இன்றி தம்மை அவர் பதவி நீக்கம் செய்ய முடியாது என்று வாதாடுவார்.

டெனீஸ்வரனின் பதவி நீக்கம் பற்றி அப்பொழுதிருந்து வலுவேற்கும் விதத்தில் வர்த்தமானியில் பிரசுரிப்பதுதான். ஆனால் அதனை ஆளுநர் செய்கின்றார் இல்லை. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்மானமொன்றைப் பெற்றவுடன் டெனீஸ்வரனுக்கு தொலைபேசி மூலம் உடனே பாராட்டுக்களைத் தெரிவித்தவர் ஆளுநரே. ஏதோ காரணத்துக்கு மேற் கூறப்பட்டவாறு பிரசுரிக்க அவர் தயங்குகின்றார். தயங்காது வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு உடனே நடவடிக்கை எடுத்தால் ஒரு நிமிடம் போகாது குறித்த கையெழுத்து வைக்க என்றும் அந்த கேள்வி பதில்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.