தமிழ்த் தேசிய ‘கோமாளி’ சீமான் கட்டுப்பணத்தை இழந்து தோல்வியடைந்தார்

இன்னும் ஐந்து வருடங்களுக்கு தம்மை ஆள்வதற்கு இன்னோரன்ன காரணங்களால் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட வாக்குகளின் பின்னர் நூற்றுக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் தவழ்ந்து சென்று அவரின் பாதங்களை தொட்டு வணங்கினர். இந்த வெற்றியின் பின்புலத்தில் வை.கோபாலசாமி குழுவின் பங்கு புதைந்திருப்பதை பலர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஈழப் பிரச்சனையை தமது அரசியல் வியாபாரத்திற்ககப் பயன்படுத்திவந்த சீமான், அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் படு தோல்வியடைந்தனர்.

குறிப்பாக சமூகவலைத் தளங்களில் செல்வாக்குப்பெற்றிருந்த சீமான் தனது தொகுதியான கடலூரில் படு தோல்வியடைந்தார். முதலமைச்சர் வேட்பாளர்களில் தான் மட்டுமே தமிழன் என்பதால் தனக்கு வாக்களிக்குமாறு கோரிவந்த சீமான் தனது தொகுதியில் 12,497 வாக்குகள் மட்டுமே வாங்கி கட்டுப்பணத்தை இழந்து ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

எம்.சி.சம்பத் (அ.தி.மு.க) 70922 வாக்குகளும், இள.புகழேந்தி (தி.மு.க) 46509 வாக்குகளும், சந்திரசேகர் (த.மா.கா) 20608 வாக்குகளும், தாமரைக்கண்ணன் (பா.ம.க) 16905 வாக்குகளும், சீமான் (நாம் தமிழர் கட்சி) 12497 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மக்கள் நலக் கூட்டணியிலும் அதிகமான வாக்குகளைப் பெறாவிட்டால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொள்வதாக பகிரங்கமாக தொலைக்காட்சி ஒன்றில் ஆவேசமாகச் சவால்விட்ட தமிழக அரசியல் கோமாளி சீமான் கட்சியைக் கலைப்பாரா என்பது குறித்து இன்னும் தெரிவிக்கவில்லை.

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்த் தேசிய அரசியல் பிழைப்புவாதிகளில் பலர் சீமானின் கட்சிக்கு ஒரு இடமாவது கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பணத்திரட்டலில் ஈடுபட்டிருந்தனர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிற்கு ஆதரவாக மேற்கொண்ட பிரச்சாரத்தின் பின்னர் சீமான் தமிழ்த் தேசிய வியாபாரிகளின் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பேசப்பட்டார். தேர்தல் முடிவுகளுக்கு முன்பதாக நடைபெற்ற போட்டி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் ரீ.சீ.சீ இற்கு ஆதரவாக சீமான் உரை ஒன்றை அனுப்பிவைத்திருந்தார்.

ஈழத்தமிழர்களின் கண்ணீரையும் அவலத்தையும் முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் சீமான் போன்றவர்களின் அரசியல் தோல்வி ஆரோக்கியமான முன்னுதாரணம்.