தமிழ் தேசிய உணர்வாளர்களே! உங்களுக்கு என்ன நடந்தது?

நூறு வருடங்களுக்கு முன்னர், துருக்கியில் நடந்த ஆர்மேனியர்கள் மீதான படுகொலைகள், இனப்படுகொலை என்று ஜெர்மன் பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது குறித்து தமிழ் தேசிய ஆர்வலர்கள் அக்கறையற்று இருப்பது ஆச்சரியத்திற்கு உரியது. பிபிசி தமிழோசை தவிர பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. என்ன காரணம்? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, “தமிழ் இனப்படுகொலையை அங்கீகரி!” என்று ஆர்ப்பாட்டம் செய்திருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் சமூக வலைத்தளங்களிலாவது இந்தத் தகவலை பகிர்ந்து கொள்ளக் கூடாதா?

முதலாம் உலகப்போரில் துருக்கி ஜெர்மனியின் கூட்டாளியாக இருந்த படியால், அன்று நடந்த இனப்படுகொலையில் ஜெர்மனிக்கும் மறைமுகமான பங்கிருந்தது. இன்றைய ஜேர்மனிய ஆட்சியாளர்கள் அந்த தவறை திருத்தி உள்ளனர். அதே மாதிரி, இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று, பிரிட்டிஷ், அமெரிக்க பாராளுமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமா? தமிழ் தேசிய உணர்வாளர்களே! உங்களுக்கு என்ன நடந்தது? ஏன் இந்த கள்ள மௌனம்?

(Tharmalingam Kalaiyarasan)