‘தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளது’

ஒற்றையாட்சியை இல்லாமல் செய்யாமல், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுத்து, இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்கள், மகாநாயக்கர்கள், தமிழர்களும் ஏற்றுக்கொள்ளும் சாதகமான தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இருக்கிறது. அதற்கு, அவர்களுடன் கலந்துரையாடி, நாட்டைப் பிளவுபடுத்தாமல் தீர்வை நோக்கிச் செல்லவேண்டும்” என்று அரசாங்கம், நேற்று (25) தெரிவித்தது.

புதிய அரசமைப்புத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பிலே கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், இலங்கையில் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசமைப்பை உருவாக்குவதற்கு முயன்ற அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

“தமிழ் மக்களுடன் இணைந்து பேசி, அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய சரியான சந்தர்ப்பம் இதுவென நான் கருதுகிறேன். அதிகாரம் தொடர்பில், வடக்கில் தமிழ் மக்களுக்குப் பிரச்சினை உண்டு. தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அவர்கள் பல வருடகாலங்களாகக் போராடிக்கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

கேள்வி: அரசமைப்புத் தொடர்பிலேயே இப்போது அதிகமாகப் பேசப்படுகிறது. மகாநாயக்க சங்கத்தினரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பதில்: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்தல் மற்றும் புதிய அரசமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டே நாம், தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தோம். அதன்பிரகாரமே நாம் செயற்பட்டு வருகிறோம். புதிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசில் கட்சிகள், சிவில் அமைப்புகளின் யோசனைகள், அரசமைப்புத் சீர்திருத்தங்கள் தொடர்பிலான பொதுப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்கவின் தலைமையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் யோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டு, அவை கலந்துரையாடல் மட்டத்தில் உள்ளன. இதில் பல்வேறு யோசனைகள், மாற்றுக்கருத்துடைய அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில், அனைத்துக் கட்சிகளும் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் விடயங்களுக்கு இணங்குவதாகத் தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில், ஒற்றையாட்சி (ஏக்கிய ராஜிய), பௌத்த மதத்துக்கு முதலிடம் உள்ளிட்டவற்றை நாம் உள்ளடக்கியிருந்ததோடு, மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பிலும் யோசனைகளை முன்வைத்திருந்தோம். அத்துடன், மாகாணங்களுக்கு அதிகபட்ச அதிகாரங்கள் வழங்கும் பட்சத்தில், ஏதாவது பிரச்சினை ஏற்படுமாயின், குறித்த மாகாண சபையை மீண்டும் மத்திய அரசாங்கத்தின் வசம் கொண்டுவருவதற்கான ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரித்தல் தொடர்பிலும் யோசனைகளை முன்வைத்தோம்.

அத்துடன், ஏனைய கட்சிகளும், தங்களுடைய யோசனைகளை முன்வைத்துள்ளன.

இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்குத்தான் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது. மகாநாயக்கர்கள், வெவ்வேறு அரசியல் கட்சிகள், பிரிவினைவாதிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இது, அரசமைப்பு அல்ல. அரசமைப்பைத் தயாரிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மாத்திரமே. இந்த யோசனைகளை கருத்தில்கொண்டு, இறுதியாக நாம் அரசமைப்புச் சட்டமூலம் ஒன்றை உருவாக்க வேண்டும். அந்தச் சட்டமூலம் தொடர்பிலேயே விவாதங்களை, கலந்துரையாடல்களை நாம் மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, ஒவ்வொரு தரப்பினராலும் முன்வைக்கப்படும் யோசனைகளை வைத்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதான் இப்போதுள்ள பிரச்சினை.

நாட்டில் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பில் சிக்கல்கள் உண்டு. நான், மாகாண முதலமைச்சராகக் கடமையாற்றியுள்ளதால் எனக்கு அதுகுறித்து நன்றாகத் தெரியும். மாகாணசபைகளில் ஆளுநரின் தலையீடுகள் தொடர்பில் பிரச்சினைகள் உண்டு. இவற்றையெல்லாம் தீர்த்துக்கொண்டு, நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது.

இன்று, விடுதலைப் புலிகளுக்குச் சார்பானோர், ஒருபுறத்தில் இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள். ஒருசில அரசியல்வாதிகளும் இந்த விடயத்துக்குத் துணைபோகிறார்கள். அதேபோன்று, மத்திய நிலையில் இருந்து செயற்படும் அரசியல்வாதிகள் பலரும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு நாம் செயற்படுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்மக்களுடன் இணைந்து பேசி, அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய சரியான சந்தர்ப்பம் இதுவென நான் கருதுகின்றேன். அதிகாரம் தொடர்பில், வடக்கில் தமிழ் மக்களுக்குப் பிரச்சினை உண்டு. தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் பல வருடகாலங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒற்றையாட்சியின் கீழ், அவர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கே நாம் முயன்று வருகிறோம்.

அதைவிடுத்து, வடக்கில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கக் கூடிய தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல், பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்க எதிர்பார்த்திருக்கும் தரப்பினருக்கு மீண்டும் இடங்கொடுத்து இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தி, நாட்டுக்குத் தீ வைப்பதா என்பதே இங்குள்ள கேள்வி. இதனை இனவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி: புதிய அரசமைப்புக்கு மகாசங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனரே?

பதில்: மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம் இன்றி நாம் இந்த விடயத்தில் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஆனாலும், அரசமைப்பு சட்டமூலமாக உருவாக்கப்பட்ட பின்னர் அது குறித்து அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுடைய கருத்துகளையும் உள்வாங்கத் தயாராக இருக்கிறோம். இங்கே சில இனவாதிகள் இந்த விடயத்தை பூதாகரமாக்குகிறார்கள். சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்படாமல் அது குறித்து வெவ்வேறு விதமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாங்களும் சிங்கள பௌத்தர்கள். நாட்டைப் பிளவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை அவர்கள் உணர வேண்டும். அத்துடன், தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய மிகப்பொருத்தமான சந்தர்ப்பம் இதுவாகும். அதற்காகவே முயன்று வருகிறோம். இது கைகூடாத பட்சத்தில், இனவாதிகள் அதற்குரிய பொறுப்பை ஏற்க வேண்டும்.

கேள்வி: புதிய அரசமைப்புக் கொண்டுவரப்படுமானால் நாடாளுமன்றத்துக்குக் குண்டு வைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவசன்ச தெரிவித்துள்ளாரே?

பதில்: நாட்டில் அரசமைப்பு என்பது, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அவசியமானதொன்றாகும். ஆனால், நாட்டைப் பின்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புபவர்களே இவ்வாறான கருத்துகளை முன்வைக்கின்றனர். இதனூடாக, அவர்கள் யுத்தத்தின்போது எவ்வாறு செயற்பட்டிருப்பார்கள் என்பது வெளிச்சமாகின்றது.

நாம், பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தைகளின் மூலமாகவே தீர்க்க விரும்புகிறோம். இவ்வாறானவர்களின் நடவடிக்கைகள் காரணமாக, இந்த நாட்டில் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும் தமக்கான அலகை வழங்குமாறும் தமிழர்கள் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படுகிறது.

மாகாண சபைகளுக்குத் தற்போதுள்ள அதிகாரத்திலும் பார்க்கக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுமானால் அது, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சாதகமான முறையிலேயே அமைக்கப்பட வேண்டும். அதற்காக நீதிமன்றப்பொறிமுறை ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும் என நாம் யோசனைகளை முன்வைத்துள்ளோம். இவற்றையெல்லாம் அறியாத அடிப்படைவாதிகள் தான் இன்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களை அடக்கி வைத்திருக்க வேண்டும் என இனவாதிகள் விரும்பினால், அதற்கு, தமிழ் மக்கள் தரப்பில் பதிலடி வழங்குவார்கள். அதற்கு யார் தீர்வு தருவார்கள் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

கேள்வி: மகா சங்கத்தினர் அனைவரும் இணைந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போது, இந்த அரசமைப்பை உருவாக்க முடியாதுதானே?

பதில்: நாம் அரசமைப்பு ஒன்றை இன்னும் உருவாக்கவில்லை. அது தொடர்பான யோசனைகள் மாத்திரமே பெறப்பட்டுள்ளன. அவை, கலந்துரையாடல் மட்டத்திலேயே இருக்கிறன. அது இறுதிப்படுத்தப்பட்ட பின்னர் யாரும் கருத்து வெளியிடலாம். அத்துடன், நீதிமன்ற நடவடிக்கைக்குக் கூட செல்லலாம்.

நாட்டுக்கு எதிரான தரப்பினரும் அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைப்போரும், அடிப்படைவாதிகளும் இணைந்து மகா சங்கத்தினரைக் கருத்து சொல்லுமாறு வலியுறுத்திவருகிறார்கள்.

கேள்வி: ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி,மோசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பதில்: ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். அரசாங்கம் என்ற வகையில் அவர்கள் முன்வைக்கும் அனைத்து விடயங்களுக்கும் நாம் செயலாற்ற வேண்டியதில்லை. தேவையான நேரத்தில் அதற்கு முகங்கொடுத்து பதிலளிப்போம். எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கம் தான் இறுதியில் பதிலளிக்கும்.

கேள்வி: அரசமைப்புச் சட்டமூலத்தைத் தயாரிக்கவில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், புதிய அரசமைப்பு என்ற ஒன்றுக்கு அவசியமே இல்லை என மகாசங்கத்தினர் கூறுகின்றார்களே?

பதில்: ஒவ்வொருவருடைய கருத்தும் ஒவ்வொரு மாதிரி உள்ளது. நாம் இன்னும் சட்டமூலத்தைத் தயாரிக்கவில்லை. அரசமைப்பை மாற்றி தமிழ் மக்களுக்குச் சாதமாக தீர்வை வழங்குமாறு தமிழ் மக்கள் கோருகின்றார்கள். இதற்காக 50-60 வருடங்களாக அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றார்கள். அவர்களுக்குத் தீர்வை வழங்காமல், மாற்று வழிகள் இருந்தால் அதனையும் முன்வைக்குமாறு நான் கோருகிறேன். அதனையும் பரிசீலிக்க நாம் தயார்.

கேள்வி: தமிழ் மக்களுக்குப் பிரச்சினை உள்ளது என்று நினைக்கிறீர்களா?

பதில்: ஆமாம்.

கேள்வி: என்ன பிரச்சினை?

பதில்: அவர்கள் தங்களுடைய பிரதேச அபிவிருத்தியை எதிர்பார்க்கின்றார்கள். அத்துடன், அதிகாரம் தொடர்பில் அவர்களுக்குப் பிரச்சினை உள்ளது.

கேள்வி: நாட்டில் எந்த இடத்திலும் விகாரை, கோவில் உட்பட ஏனைய மதத் தலங்களை அமைக்க முடியுமான சூழ்நிலை இருக்கும்போது, அரசமைப்பின் ஊடாக அதிகாரத்தை வழங்க முயல்வது ஏன்?

பதில்: நீங்கள் முதலில் அந்தப் பகுதி மக்களிடம் சென்று கதைத்துப் பாருங்கள் புரிந்துகொள்வீர்கள். அரசமைப்பு தொடர்பில் ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அரசமைப்பின் இறுதி வரைவு கூட இன்னும் தயாரிக்கப்படவில்லை.

தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இருக்கிறது. அதற்கு, அவர்களுடன் கலந்துரையாடி, நாட்டைப் பிளவுபடுத்தாமல், ஒற்றையாட்சியை இல்லாமல் செய்யாமல், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுத்து, இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்கள், மகாநாயக்கர்கள் மற்றும் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளும் சாதகமான தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்.