தொடங்கியது குதிரை பேரம்: எம்எல்ஏக்களுக்கு ரூ.150 கோடி வலைவிரித்த ஜனார்த்தன ரெட்டி: ஆடியோ வெளியிட்டு காங்கிரஸ் புகார்

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில், எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம், பதவி சலுகைகளைக் கூறும் பாஜகவின் ஜனார்த்தன ரெட்டியின் ஆடியோ டேப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில், நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை முதல்வர் எடியூரப்பா நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு, தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்படு, சட்டப்பேரவை கூடுவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
104 எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் பாஜகவுக்கு பெரும்பான்மையை நீருபிக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. இதனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை பாஜகவினர் குதிரைபேரம் கபளீகரம் செய்யலாம் என்பதால், ஐதராபாத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் அவர்களை பாதுகாப்பாக அந்த கட்சியினர் தங்கவைத்துள்ளனர்.

இந்நிலையில், சுரங்க ஊழலில் ஈடுபட்டு சிறை சென்று ஜாமீனில் வெளிவந்திருக்கும் ஜனாதர்த்தன ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் ரெய்ச்சூர் எம்எல்ஏ பசனகவுடாவிடம் பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் கட்சியினர் இன்று மாலை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆடியோவில் ரெய்சூர் எம்எல்ஏ பசவனகவுடாவிடம் மர்மநபர் ஒருவர் பேசுகிறார். ஆனால், அதை ஜனார்த்தன ரெட்டி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது.

அந்த ஆடியோவில், பசவனகவுடாவா, சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தேவை. என்ன தேவையென்றாலும் கிடைக்கும். உங்களுக்கு அமைச்சர் பதவி தேவை என்றாலும் தருகிறோம். மிக முக்கியமான, உயர்ந்த இடத்தில் உள்ளவரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சந்திக்கலாம். நான் கூறுவது உண்மை. உங்களுக்கு இப்போது உங்களுக்கு என்ன சொத்து இருக்கிறதோ அதைக்காட்டிலும் பன்மடங்கு சொத்துக்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

உங்களின் துரதிருஷ்டம் நீங்கள் வெற்றி பெற்றும் பயனில்லாமல் இருக்கிறீர்கள். நீங்கள் அமைச்சராகலாம், ரூ.150 கோடி பணம், பதவிகள் கிடைக்கும். என்று ஜனார்த்தன ரெட்டி பேசுகிறார்.

அதற்கு இல்லை மன்னித்து விடுங்கள், எனக்குத் தேர்தலில் வாய்ப்பளித்துப் போட்டியிட வைத்து வெற்றி பெறவைத்துள்ளார்கள். அவர்களுக்கு நான் துரோகம் செய்ய முடியாது. நான் உங்கள் மீது மரியாதை வைத்துள்ளேன் தொடர்பை துண்டித்துவிடுங்கள் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பசவனகவுடா தெரிவித்துள்ளார்.
ஜனார்த்தன ரெட்டி குறித்த ஆடியோவை வெளியிட்ட காங்கிரஸ் கட்சுயினர்
இந்த ஆடியோவை வெளியிட்ட காங்கிரஸ்கட்சி, சுரங்க ஊழல் வழக்கில் சிறை சென்று ஜாமீனில் இருக்கும் ஜனார்த்தன ரெட்டிதான் இதைப் பேசியுள்ளார். தனக்குப் பின்னால் பாஜக தலைவர் அமித்ஷா பக்கபலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் இதை பாஜக கட்சி மறுத்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்த ஆடியோ போலியானது, காங்கிரஸ் கட்சியின் கைவரிசையாக இது இருக்கும் எனத் தெரிவித்தார்.

சுரங்க ஊழல் முறைகேட்டில் சிக்கிய ஜனார்த்தன ரெட்டி சிறையில் இருந்து ஜாமீனில்வந்துள்ளார். அவரின் சகோதரர் சோமசேகரரெட்டி ,பெல்லாரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.