‘தொடர்ந்தும் பிரதமராக இருப்பேன்’ – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

அரசமைப்பின் பிரகாரம் தொடர்ந்து பிரதமராக, தான் இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்தை கருத்தில்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் அலரி​மாளிகையில் முதன்முதலாக ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதன் காரணமாக அதிகரிக்கப்பட்ட பொருட்களின் விலை என்பன, இந்தத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கம் செலுத்தியிருந்தது. அதுமாத்திரமன்றி, 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் சிலதை நிறைவேற்றியிருக்கிறோம், பலது நிறைவேற்றப்படவில்லை. அதுவும் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகையால், மக்கள் எங்களுக்கு வழங்கிய எச்சரிக்கையை மனதார ஏற்றுக்கொள்கிறோம்.

“யார் என்ன சொன்னாலும், இந்த அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டுசெல்வோம். வரும் வாரத்தில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. பலத்தை நிரூபிக்க விரும்புபவர்கள் நாடாளுமன்றில் பார்த்துக்கொள்ளட்டும். அரசமைப்பின் பிரகாரம், என்னுடைய பதவியைத் துறக்கவேண்டிய அவசியமில்லை. அதனை எவரும் வலியுறுத்தவும் முடியாது.

“நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, மக்கள் சேவை வழங்கவேண்டியது எங்கள் பொறுப்பு. அந்தப் பொறுப்பை நாங்கள் செய்வோம்” என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குப் புதுத் தலைமை

“ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை 70ஆவது மாநாட்டிலேயே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சியை புதிய தலைமுறை பொறுப்பேற்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வெகுவிரைவில், புதிய தலை​முறையின் கையில் கட்சி ஒப்படைக்கப்படும்” என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மஹிந்தவை காப்பாற்றவில்லை

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த திங்கட்கிழமை என்னுடன் பேசினார். பிரதமர் பதவியைத் துறக்கப்போகிறீர்களாமே என்று கேட்டார். நாங்கள் பலமாக இருக்கும்​போது எதற்காகப் பதவி துறக்க வேண்டும் என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன். அதற்கு, நல்லது நல்லது என்று கூறினார். அதைத்தவிர அவருடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

“மஹிந்த ராஜபக்ஷவை காப்பாற்ற வேண்டிய தேவை எனக்கில்லை. ராஜபக்ஷ குடும்பத்தினரை விசாரணைக்குட்படுத்தி, கைது செய்து, சிறையிலும் அடைத்திருக்கிறோம். அவை நீதியின் பிரகாரம் இடம்பெற்றவை. அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை எப்பொழுதும் எனக்கு இருந்ததில்லை” என்றார் பிரதமர்.

அமைச்சரவையில் மாற்றம் வரும்

“ஆட்சியைத் தொடர்வதற்கு அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. எத்தகைய மாற்றங்கள் ஏற்படவுள்ளன என்பதை வரும் வாரத்தில் அறிந்துகொள்வீர்கள். அத்தகைய மாற்றங்களுடன் தொடர்ந்தும் நாம் பயணிப்போம்” என்றார் ரணில் விக்கிரமசிங்க.

உயர்ஸ்தானிகர்களின் சந்திப்பு

“சீனாவின் புதிய தூதுவர் மற்றும் இந்திய, அமெரிக்க, பிரித்தானியத் தூதுவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பில் அவர்களின் கரிசனை அமைந்திருந்தது. நட்புரீதியான சந்திப்பாகவே அச்சந்திப்புகள் அமைந்திருந்தன” என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.