த.தே.கூவில் பிளவு? தனித்தியங்குவது குறித்து பங்காளிக் கட்சிகள் பேச்சு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக, அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி திரும்பப் பெறாவிட்டால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாகத் தெரியவருகிறது.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தமிழரசுக் கட்சியானது, முதலமைச்சருக்கு எதிராக தன்னிச்சையான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

இதனை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எப், டெலோ, புளொட் ஆகிய கட்சிகள் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், வடமாகாண முதலமைச்சருக்கு, தமது ஆதரவையும் வழங்கியுள்ளன.

இந்நிலையில், முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, தமிழரசுக் கட்சி உடனடியாக மீளப்பெறாவிட்டால் நாடாளுமன்றத்திலும் இம்மூன்று பங்காளிக் கட்சிகளும் தமிழரசுக் கட்சியில்இருந்து வெளியேறி தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாகவும் இது தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.