நடுவானில் குலுங்கிய விமானத்தால் ஒருவர் பலி; 30 பேர் காயம்

இது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது ஓர் அரிதான சம்பவம். லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த எங்கள் Boeing 777-300 நுசு ரக விமானம் SQ321 விமானம் வழியில் கடுமையாக குலுங்கியது.

இதனால் விமானம் பாங்காக் நகருக்கு திருப்பிவிடப்பட்டு அங்கே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு விமானம் பாங்காக் விமான நிலையத்தில் தரை இறங்கியது.

அரிதான இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பயணிகள் காயமடைந்துள்ளனர். இதனை நாங்கள் உறுதி செய்கிறோம்.

இப்போதைக்கு விமானத்தில் உள்ள மற்ற பயணிகள் விமான ஊழியர்களின் நலனை உறுதி செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் பயணிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்யும்படி கோரியுள்ளோம். மேலும், பாங்காக் நகருக்கு உடனடியாக எங்களுடைய குழு ஒன்று அனுப்பிவைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.