நம்பிக்கையில்லாப் பிரேரணை – சிறிசேனவிடமே இறுதித் தீர்மானம் உள்ளது’

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதும், வெற்றியடையச் செய்வதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையிலேயே உள்ள​தென தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக பூரண நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

நுவரெலியா சீத்தாஎலிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட உல்லாச விடுதியொன்றின் திறப்பு விழா, நேற்று (01) இடம்பெற்றது. அதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானும் கலந்துகொண்டார்.

அங்கு குழுமியிருந்த ஊடவியலாளர்களில் ஒருவர், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் கேள்வி எழுப்புகையில், அருகிலிருந்த ஆறுமுகன் தொண்டமான், மஹிந்தவின் வலது கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டார்.

இதனிடையே பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, “பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தரும் வகையில் அனைவரும் என் கையை பிடிக்கின்றார்கள். இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாகவே செயல்படுகின்றார்கள். ஆனால், சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிடமே இறுதித் தீர்மானம் உள்ளது. ஆனால், நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்மந்தமாக பூரண நம்பிக்கையிருக்கின்றது” என்றார்.

இவ்வாறு பதிலளிக்கும் போது இடையில் குறிக்கிட்ட ஆறுமுகன் தொண்டமான், மஹிந்த ராஜபக்ஷவை பார்த்து, “நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, நீங்கள் கையொப்பம் இடவில்லை. இது தான் எனக்கும் பிரச்சினையாக இருக்கின்றது” என்றார்.

பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த மஹிந்த, “எப்போதும் விசுவாசம் என்பது இருந்தது இல்லையே. இப்போது மாத்திரம் கையொப்பம் இடுவதற்கு” என்றார்.

இதனிடை​யே கருத்துரைத்த ஆறுமுகன் தொண்டமான், “மனிதனுக்கு இரண்டு கண்கள் உள்ள. அதிலொரு கண் மைத்திரிபால சிறிசேன என்றால் மற்றொரு கண் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறே நாம் செயற்படுகின்றோம்” என்றார்.