நல்லிணக்க பொறிமுறைக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(12) வெள்ளிக்கிழமை இலங்கை மக்களின் நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனை பெறுவதற்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு உத்தியபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை வெளிவிகார அமைச்சின் எற்பாட்டில் இது நடைபெற்றது. வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹொட்டியாரட்சி ஆகியோர் தலைமையில் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் ஊடாக மக்கள் பல பாகங்களில் இருந்தும் மூன்று மொழிகளிலும் இலங்கை நாட்டின் நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனைகளை வழங்க முடியும். இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரை இந்த இணையத்தளம் ஊடாக மக்கள் ஆலோசனைகளை வழங்க முடியும்.இதன் இறுதி அறிக்கைகள் எதிர்வரும் மே மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் பாதிக்கப்பட்ட மக்களிடம் உள்ள நீதிக்கான எதிர்பார்ப்பை அறிந்து கொள்ளவே நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாகவும், அச்சம் இல்லாமலும் தங்கள் கருத்துக்களை செயலணிக்கு கூறலாம் என தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை செயலணியின் அங்குரார்பண நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஜ.நா மனித உரிமைகள் ஆணையகம் நிறைவேற்றிய தீர்மானம் அடிப்படையில் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மக்கள் அச்சம் இல்லாமல் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கலாம்.மேலும் இலங்கை அரசாங்கம் சர்வதேசத் திற்கு மட்டுமல்லாமல் எமக்கும் சில வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. எனவே அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப் படுகின்றதா? என்பதை நாம் அவதானிப்போம்.இதேவேளை சிறைகளில் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய் யப்படவேண்டும் என இன்றைய கூட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.பரமநாதன் கோரிக்கை விடுத்ததுடன்

சிறைகளில் உள்ள கைதிகளின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும் நீண்டகாலமாக விசாரணைகள் இல்லாமல் பலர் தடுத்துவைக்கப்படுள்ளனர் அவர்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.எனினும் இதற்கு பதில் அளித்த சுமந்திரன், வழக்குகள் பதியப்படாமல் இருந்த 11தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் வழக்கு நடைபெற்று வருபவர்களும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுமே. இந்நிலையில் விசாரணைகள் இல்லாமல் நீண்டகாலம் தடுத்துவைக்கப் பட்டுள்ளவர்கள் என்ற கருத்து தவறானது எனவும் கூறினார். இந்நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.