நான்காவது தடவையாக ஜனாதிபதியானார் புடின்

ரஷ்ய ஜனாதிபதியாக, விளாடிமிர் புடின் நான்காவது தடவையாக பதவியேற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புடின் இன்றைய தினம் பதவியேற்றுள்ளார். கடந்த 18 வருடங்களாக ஜனாதிபதி அல்லது பிரதமராக அதிகாரத்தில் உள்ள புடினை, எதேச்சதிகாரமிக்கவர் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றசம்சாட்டியுள்ளன. கடந்த சனிக்கிழமை, ரஷ்யாவில் புடினுக்கு எதிராக 19 நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில், 76 சதவீத வாக்குகளைப் பெற்று, ரஷ்ய ஜனாதிபதியா விளாடிமிர் புடின், மீண்டும் தெரிவானார், எனினும் இத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புடினுக்கு சவாலாக இருக்கக்கூடிய ஒரே வேட்பாளராகப் கருதப்பட்ட, அலெக்ஸி நவால்னி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. ஊழல் வழக்கில் அவர் குற்றவாளியாக காணப்பட்டதால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை நவால்னி இழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை நவால்னி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.