நாமல், முஸம்மில் ஒரே சிறை பிரிவில்

பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை (11) முற்பகல் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் ஈ பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதே ஈ பிரிவில், தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த பிரிவில் சுமார் 20 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவருக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

70 மில்லியன் ரூபாயினை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் பணச் சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். தனது மகனான நாமல் ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து நேற்று திங்கட்கிழமை (11) இரவு பார்வையிட்டார்.