நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி!

விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ் செழியன். அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது, பஸ் நடத்துநர்கள் மிதி பலகையில் நின்று, வீதியில் செல்லும் ஏனைய வாகனங்களை முந்தி செல்ல முயற்சி எடுக்கும் நடத்துநர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்படுவார்கள் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதியின் குறித்த அறிவிப்பின் மூலம், விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, கொலைக்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்படும்போது, அதி உச்ச தண்டனையான சாவுத் தண்டனை வழங்கப்படும் என்பது இலங்கை குற்றவியல் சட்டக் கோவை சுட்டிக்காட்டுகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி நீர்வேலியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சின்னட்டி சண்முகம் என்பவர் கொல்லப்பட்டார். இந்த விபத்து ஏற்படக் காரணமான வாகானச் சாரதி என்ற குற்றச்சாட்டில் கைதடியைச் சேர்ந்த நபர் நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டார். அதன்படி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபா நட்டஈடும், 16 ஆயிரத்து 500 ரூபா நீதிமன்ற அபராதமும் விதிக்கப்பட்டது.

குறித்த வழக்கில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால், குற்றஞ்சாட்டப்பட்டவரின் சாரதி அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த நபர் தமது சாரதி அனுமதிப் பத்திரத்தை மீள வழங்குமாறு கோரி, யாழ்.மேல்நீதிமன்றில் தாக்கல் செய்த மீளாய்வு மனு மீதான விசாரணை நேற்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வாகானச் சாரதிகளுக்கான வீதிப் போக்குவரத்து விதிகள் தொடர்பில் கண்டிப்பான விடயங்களை மேல்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியதுடன், விபத்துக்கள் தொடர்பில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற யோசனைகளையும் முன் வைத்தார். இதன்போது, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்ததாவது,

சில வருடங்களுக்கு முன், பொல்காவலையில் ரயில் வருவதனையடுத்து, ரயில் பாதை பூட்டப்பட்டிருந்தது. எனினும் குறித்த பாதை ஊடாக வாகனத்தைச் செலுத்திய பஸ் சாரதி, நடத்துநர் இருவருக்கும் எதிராகக், கொலை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று விபத்தை ஏற்படுத்திவிட்டு அதனை விபத்துச் சாவு என்று கூறமுடியாது. சாரதிக்கும் நடத்துநருக்கும் எதிராகக் கொலை வழக்குகள் தாக்கல் செய்யப்படவேண்டும். விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களை போக்குவரத்துப் போலிஸார், சட்டமா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, கொலைக் குற்ற வழக்காகத் தாக்கல் செய்யவேண்டும்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் சாரதிகளும் தனியார் பஸ் சாரதிகளும் பெரும்பாலான விபத்துக்களுக்குக் காரணமாகவுள்ளனர். அவர்களுக்கு அரச நிர்வாக அதிகாரிகளால் பல தடவைகள் ஆலோசனை வழங்கப்பட்டும், அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. எனவே சில விடயங்கள் நீதிமன்றின் கவனத்தில் கொள்ளப்படுகிறன. அதன்படி பின்வரும் அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தனியார் பஸ்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதனைத் தனியார் பஸ் உரிமையாளர்கள் உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பஸ்களின் மிதிபலகையில் நின்றவாறு மற்றைய வாகனங்களை முந்திச் செல்வதற்கு உதவியளிக்கும் அனைத்து நடத்துநர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள். தனியார் பஸ் சாரதிகள் வேகமாக னபோட்டிக்கு பஸ்களைச் செலுத்தி ஒரு வாகனத்தை மற்றைய வாகனம் முந்திச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டால், குறித்த தனியார் பஸ்களின் போக்குவரத்து உரிமம் நீதிமன்றால் இரத்துச் செய்யப்படும். அத்துடன் சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்படும். அத்தகைய பஸ்கள் அனைத்தும் பயணிகள் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாது என்ற கட்டளையை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் நீதிமன்று இறுதி எச்சரிக்கை செய்கிறது.

குற்றச்செயலில் ஈடுபட்ட எந்தவொரு வாகனமும் நீதிமன்றினால் விடுவிக்கப்படமாட்டாது. இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதிக்கும் நடத்துனருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் எதிராக உடன் நடவடிக்கை எடுக்கப்படும். சாரதியும் நடத்துநரும் கைது செய்யப்பட்டுக் கொலைக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கும் சூழ்நிலை ஏற்படும். நீதிமன்றைப் பொறுத்தவரை மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. குற்றச்செயல் புரிபவர்களுக்கு நீதிமன்றம் தயவு தாட்சண்யம் இன்றி, இரக்கமின்றித் தண்டனை வழங்கவேண்டும். வழக்கு விசாரணைகள் நிறைவடையும்வரை வாகன உரிமம், சாரதி அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு, கொலை வழக்குத் தாக்கல் செய்யப்படும். பிணை இலகுவில் வழங்கப்படமாட்டாது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் சாரதிகள், தனியார் பஸ்களுடன் போட்டிபோட்டு ஓடக்கூடாது. இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் நடத்துநர்களும் தனியார் பஸ்களின் நடத்துநர்களும் மிதிபலகையில் நின்று பயணிக்கக்கூடாது. விபத்துச் சாவு போன்ற குற்றச் செயல்கள் இனிமேல் இடம்பெற அனுமதிக்க முடியாது. இவற்றைக் கூட்டங்கள் வைத்து ஆலோசனை வழங்க முடியாது. புத்திமதிகள் சொல்ல வேண்டிய அவசியம் இனிமேல் இல்லை. சிறைத் தண்டனைகள் மட்டுமே இத்தகைய குற்றங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று நீதிமன்று தீர்மானிக்கின்றது.

இந்த விடயங்களில், இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைவர் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். குறித்த அதிகாரிகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு அவர்களது பஸ் சாரதிகளும் நடத்துநர்களும் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது இருக்க முடியாது. அனைவரும் வீதிக்கு இறங்கி கடமை செய்ய வேண்டும். அதன் தலைவர்கள், அதிகாரிகள், சாரதிகள், நடத்துநர்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். தனியார் பஸ் உரிமையாளர்கள், சங்கம் வளர்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஒழுக்கம் இல்லாத வாகன சாரதிகள், உரிமையாளர்களுக்கு சங்கம் வளர்க்க வேண்டிய அவசியமில்லை. தனியார் பஸ் சங்கம் நீதிமன்றினால் தடை உத்தரவு வழங்கப்பட்டு மூடப்படும். அத்துடன், குறித்த சங்க நிர்வாகிகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மக்களுடன், அவர்களின் வாழ்க்கையுடன் ன அவர்களின் உயிர்களுடன் விளையாடும் எந்தச் சங்கத்துக்கும் அனுமதியில்லை. அத்தகைய சங்கத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து பஸ்களைப் பரிசோதனை செய்யும் ஆணையாளர்கள், பரிசோதகர்கள், இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ்கள் வீதியில் ஓடுவதற்குத் தகுதியானதா என்பதனை உடனடியாகப் பரிசோதனை செய்ய வேண்டும். நீதிமன்றுக்கு அழைக்கும்போது, குறித்த பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார் யாழப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி.