பங்காளிகளின் தனிவழி சந்திப்பில் முக்கிய அமைச்சர்கள் இருவர் பங்கேற்பு

எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில பதவிவிலக வேண்டும் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவம் எம்.பி வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பிலும் பங்காளி கட்சிகளின் தலைவர் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றம், அமைச்சர் கம்மன்பிலவின் தனித் தீர்மானம் அல்ல, அரசாங்கத்தால் ​எடுக்கப்பட்ட பொதுத் தீர்மானம் ஆகும். ஆகையால், அமைச்சர் கம்மன்பிலவுக்காக குரல்கொடுப்பதற்கு, அக்கூடத்தில் பங்கேற்றிருந்த பங்காளி கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கைக்கு அதிருப்தியை வெளியிட்டு அறிக்கையொன்றை வெளியிடவும் இக்கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழ்மையான மக்களுக்கு, அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய நிவாரண பொதியை வழங்குவதற்கும் இக்கட்சித் தலைவர்கள் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அத்துரலிய ரத்ன தேரர், வாசுதேவ நாணயக்கார, டிரான் அலஸ், உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

அதுமட்டுமன்றி, வாழ்க்கைச் செலவு தொடர்பிலான அமைச்சரவை உப-குழுவின் உறுப்பினர்களான அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.