பசிலின் மனைவிக்கும், மகளுக்கும் அழைப்பு

மாத்தறையில் காணியொன்றைக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மாத்தறை நீதிமன்ற நீதவான் யுரேஷா டி சில்வாவினால், கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில், கொழும்பிலுள்ள நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக, அவர் நேற்று வியாழக்கிழமை அழைக்கப்பட்டிருந்தார். அப்பிரிவுக்கு அவர், நேற்றுக்காலை 10:40க்கு சமுகமளித்திருந்தார். விசாரணைகளின் பின்னர், முற்பகல் 11:20க்கு கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், தென் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மாலை 3 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கட்டளையிட்ட நீதவான், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில், நேற்று மாலை 3:25க்கு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதேவேளை, ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணிக்கும் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கொழும்பிலுள்ள நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு கட்டளையிட்டார்.

இதேவேளை, இந்த காணி விவகாரம் தொடர்பில் இதற்கு முன்னர், பசில் ராஜபக்ஷவின்
மைத்துடன் மற்றும் கட்டட வடிவமைப்பாளர் கைதுசெய்யப்பட்டதுடன், அவ்விருவரும் பிணையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தேஜானா ஆகியோர், மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

விமானப் படையினரின் விமானங்களை, தமது தேவைக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே ஆணைக்குழுவினால் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர், என ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.

மே 4, 5ஆம் திகதிகளில், இதேவிடயம் தொடர்பில் ஆணைக்குழுவுவில் ஆஜராகுமாறு கேட்கப்பட்டபோதும், வெளிநாட்டில் இருந்தமையால், அவர்களால் சமுகமளிக்க முடியவில்லை என அவர் கூறினார்.

புஷ்பா ராஜபக்ஷ, காலையிலும் மகள் தேஜா ராஜபக்ஷ பிற்பகலிலும் ஆஜராக வேண்டுமென அழைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில், பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னர் அழைக்கப்பட்டிருந்தனர்.