பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 158 தமிழர்களே சிறையில் உள்ளனர்!

இலங்கை முழுவதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 158 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பான விவாதமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனடிப்படையில், 103 கைதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன என அவர் தெரிவித்தார்.

இப்படியான கைதிகளில், 14 பேர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஆனால் அவர்கள் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார். குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட 32 கைதிகளில் ஒன்பது பேர், தமது தண்டனைகளை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தனது உரையின்போது கூறியுள்ளார். காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான புதிய சட்ட விதிமுறைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேலும் தெரிவித்தார்