பரிஸில் மீண்டும் வன்முறை

பிரான்ஸ் தலைநகர் பரிஸில், அந்நாட்டு அரசாங்க -த்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்கள், நேற்று முன்தினம் (08), மீண்டும் வன்முறையாக மாறின. இதைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில், மோதல் ஏற்பட்டது.பொலிஸார் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள், கார்களை எரித்தும் கடைகளையும் உணவகங்களையும் எரித்தும், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மறுபக்கமாக, கலகமடக்கும் பொலிஸார் பயன்படத்தப்பட்டு, போராட்டக்காரர்கள் மீது, கண்ணீர்ப்புகைக் குண்டு, நீர்ப் பீய்ச்சியடிப்பு, குதிரைகள் பயன்படுத்தப்படல் ஆகிய முறைகள் மூலம், தாக்குதல் நடத்தப்பட்டது.

சனிக்கிழமை இடம்பெற்ற வன்முறைகள், மோசமானதாக இருந்தாலும், ஒரு வாரத்துக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகளை விடக் குறைவானவையாகக் காணப்பட்டன.

பரிஸ் நேரப்படி நேற்று முன்தினம் மாலை (இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் இரவு), பரிஸில் மாத்திரம் 100,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்குபற்றினர் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில், 125,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்குபற்றினர் எனவும், பிரான்ஸின் உள்விவகார அமைச்சர் கிறிஸ்தோபி காஸ்ட்னெர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் இடம்பெற்ற வன்முறைகளில், போராட்டக்காரர்கள் சுமார் 120 பேரும், பொலிஸார் சுமார் 20 பேரும் காயமடைந்தனர் எனத் தெரிவித்த அமைச்சர், நாடு முழுவதிலும் சுமார் 1,000 பேர் கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், எரிபொருள்களின் விலையுயர்வைத் தொடர்ந்தே, ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், எரிபொருள்களின் விலைகள் குறைப்பட்ட பின்னரும், நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராகவும் ஜனாதிபதி மக்ரோனின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், இப்போராட்டங்கள் தொடர்கின்றன. ஒளி பட்டுத் தெறிக்கக்கூடிய, மஞ்சள் நிறமான அங்கிகளை அணிந்தவாறே, போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுகின்றன நிலையில், “மஞ்சள் அங்கிப் போராட்டம்” என, இது அழைக்கப்படுகிறது.