பழிக்குப் பழி: 35 அமெரிக்க தூதர்களை வெளியேற்ற ரஷ்யா திட்டம்

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு தூதர்கள் 35 பேரை வெளியேற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த தேர்தல் முறையில் ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் நுழைந்து மோசடி செய்து விட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் குற்றம் சாட்டி இருந்தார்.

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடனும், இதே குற்றச்சாட்டை கூறி இருந்தார். டொனால்டு டிரம்ப் வெற்றி பெறும் வகையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் கூஷிபேர் 2.0 என்ற மால்வேர் பயன்படுத்தப்பட்டதாகவும், இதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் ஸ்னோடன் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகள் 35 பேரை அமெரிக்கா அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. அவர்கள், குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் 35 பேரை வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இதுபற்றி ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் கூறுகையில், ‘அமெரிக்க தூதரக அதிகாரிகள் 35 பேரை வெளியேற்றுவதற்காக அதிபர் விளாடிமிர் புதினுக்கு பரிந்துரை செய்திருக்கிறேன். அதன்படி மாஸ்கோவில் உள்ள தூதரகத்தில் இருந்து 31 அதிகாரிகளும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துணை தூதரகத்தில் இருந்து 4 பேரும் நீக்கப்படுவார்கள். தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிற்குள் உள்ள தூதரக கட்டிடத்தையும் கிடங்கையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என்றார்.

இந்த பரிந்துரையை புதின் ஏற்றுக்கொண்டது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பழிக்குப் பழி நடவடிக்கையாக தூதர்களை வெளியேற்றுவது வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஜார்ஜ் புஷ் ஆட்சிக்காலத்தின்போது 51 ரஷ்ய தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். அதற்கு பதிலடியாக 50 அமெரிக்க தூதர்களை ரஷ்யா வெளியேறும்படி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

(Samathuvam Tamil)