பிரெக்சிற் பேச்சுவார்த்தை: துரிதப்படுத்தக் கோருகிறது ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்த வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில், போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற நிலையிலேயே, இந்த நிலைப்பாட்டை, அவ்வொன்றியம் வெளிப்படுத்தியுள்ளது. பிரெக்சிற் தொடர்பான புதிய பேச்சுவார்த்தைகள், பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸல்ஸில், நேற்று முன்தினம் ஆரம்பமாகின. அதன்போதே, இந்த நிலைப்பாட்டை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம பேரம்பேசுநர் மைக்கல் பார்னியர் வெளிப்படுத்தினார்.

பிரெக்சிற்-க்குப் பின்னரான உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, ஐக்கிய இராச்சியம் விரும்புகின்ற போதிலும், பிரெக்சிற் தொடர்பான சட்டமூலம், ஐ.இராச்சியத்தில் வாழ்கின்ற ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் எதிர்காலம் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி ஆராய முன்னர், உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இல்லை என, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கிறது.

இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்த மைக்கல் பார்னியர், “உண்மையைச் சொல்வதானால், நான் கரிசனை கொண்டுள்ளேன். நேரம், விரைவாகச் சென்றுகொண்டிருக்கிறது. தெளிவற்ற தன்மையை நாங்கள் விரைவில் இல்லாமல் செய்யும் போது, எதிர்கால உறவு தொடர்பான பேச்சுவார்த்தையை, நாங்கள் விரைவில் ஆரம்பிக்க முடியும். பேரம்பேசலை, உறுதியாக நாங்கள் ஆரம்பிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த பருவகாலத்தில், ஐ.இராச்சியத்தால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை வரவேற்ற அவர், எனினும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் எதிர்பார்க்கும் தெளிவான தன்மையை அவை வழங்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

எனினும் கருத்துத் தெரிவித்த, ஐ.இராச்சியத்தின் பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ், வெளியேற்றம் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய விடயங்களை, தமது அரசாங்கம் ஏற்கெனவே வழங்கியுள்ளது என்று தெரிவித்தார். அத்தோடு, தீர்வொன்று பெறப்பட வேண்டுமாயின், நெகிழ்வுத்தன்மையும் கற்பனைத் திறனும், இரு தரப்புகளிடமும் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.