புளோரிடா தாக்குதல் தொடர்பாக தாக்குதலாளியின் மனைவிக்குத் தெரிந்திருந்தது

அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஒர்லான்டோ பகுதியிலுள்ள சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக, அந்தத் தாக்குதலை மேற்கொண்டவரின் தற்போதைய மனைவிக்குத் தெரிந்திருந்ததாக, அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக, ஓமர் மட்டீனின் மனைவியான நூர் சல்மான் மீது, இன்றைய தினமே வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் அறிவிக்கப்படுகிறது.

அவரது நடவடிக்கை குறித்து அறிந்த மனைவி, அவரை அதிலிருந்து மீட்பதற்கு முயன்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த இரவு விடுதி மீதான தாக்குதலைத் திட்டமிடுவதற்காக, முன்பொருநாள் இந்த இரவு விடுதிக்கு, அவரை ஏற்றிக்கொண்டு வந்து விட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஓமர் மட்டீனின் முன்னாள் மனைவியான சித்தோரா யூசுபி, தங்களது திருமணத்தின் நான்காவது மாதத்தின் பின்னரே அவரைப் பிரிந்ததோடு, தனது குடும்பத்தினரைப் பார்ப்பதற்கோ அல்லது வெளியில் விடுவதற்கோ ஓமர் அனுமதித்ததில்லை எனவும் தன்னை அடித்தார் எனவும் தெரிவித்திருந்தார்.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போதைய மனைவியான நூர் சல்மானும், அவர்களது திருமணத்தின் பின்னர் ஒரேயொரு தடவை மாத்திரமே தனது தாயைப் பார்க்கச் சென்றிருந்தார் எனவும், அவரைப் பார்க்க ஓமர் விடுவதில்லை எனவும், அத்தாய் தெரிவித்துள்ளார்.